திருப்பரங்குன்றம் | "தமிழக அரசு உள்நோக்கத்துடன்.." - மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்!
திருப்பரங்குன்றம், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. காலை முதல் இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தற்போது, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கின்றனர்.
தொடர்ந்து நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்பில், தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அளித்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றாத காரணத்தாலேயே மனுதாரரை தீபத்தூணில் தீபமேற்ற நீதிபதி உத்தரவிட்டார். அதேசமயம், மாநில அரசு தனது கடமையை செய்ய தவறியதாலேயே சிஐஎஸ்எஃப் வீரர்களை நீதிபதி பாதுகாப்புக்கு அனுப்பியிருக்கிறார். எனவே, இந்தப் பிரச்சனையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு சரியானதே எனவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் மாநிலஅரசு இந்த மனுவை தொடர்ந்துள்ளது என்ற விமர்சனத்தையும் தமிழக அரசின் மீது நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருப்பதன் மூலம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்பது சட்டப்பூர்வமாகிறது.

