மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு | 5 மண்டலத் தலைவர்கள் ராஜினாமா – மத்திய குற்றப்பிரிவு விசாரணை!
செய்தியாளர்: பிரசன்னா
மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு புகார்:
மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரிவிதிப்பு முறைகேடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களும் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, மேயர் மற்றும் 5 மண்டலத் தலைவர்களிடம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னாள் கமிஷனர் உள்ளிட்ட 8 பேர் கைது:
இதையடுத்து, மண்டலத் தலைவர் வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.. இதையடுத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் கமிஷனர் தினேஷ்குமார், ஐந்து பில் கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்ததோடு, கமிஷனரின் பாஸ்வேர்ட் தவறாக பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, மதுரை மாநகராட்சி ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
5 மண்டல தலைவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்பு:
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி மண்டல தலைவர்கள் குழுத் தலைவர்கள் ராஜினாமா கடிதத்தை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் ஆணையாளர் சித்ரா விஜயனிடம் வழங்கினார்கள். அதேபோல், நகரமைப்பு நிலைக்குழுத் தலைவர் மூவேந்திரன் மற்றும் வரிவிதிப்பு நிலைக் குழுத் தலைவர் விஜயலட்சுமி ஆகியோரும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து 5 மண்டல தலைவர்களின் ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விகாரம் தொடர்பாக அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி கண்காணிப்பில் நடைபெறுவதாகத் தெரிய வருகிறது. மேலும், ராஜினாமா செய்யப்பட்டோர் இடத்திற்கு புதிய நியமனங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.