திருப்பரங்குன்றம் வழக்கு : நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய மதுரை மாவட்ட ஆட்சியர்.!
திருப்பரங்குன்றத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம. ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் எனவும் மனுதாரர் தீபமேற்றுவதற்காக CISF வீரர்களையும் பாதுகாப்பிற்காக செல்லவும் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், பொது அமைதிக்கு பிரச்னை வரும் எனக் கூறி தீபம் ஏற்ற சென்றவர்களை திருப்பரங்குன்றம் மலையில் ஏறுவதற்கு முன்பே காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 144 தடை உத்தரவை அமல்படுத்தி காவல்துறையினர் அக்கூட்டத்தை கலைத்து இருந்தனர். இந்த நிலையில், தனிநீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கு கடந்த ஜனவரி 6 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்த நிலையில், தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே சமயம், தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தீர்ப்பையும் உயர்நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.
இச்சூழலில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு போதிய ஏற்பாடுகள் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜீ.ஆர் சுவாமிநாதன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நீதிமன்ற உத்தரவை மீறும் நோக்கம் இல்லை எனவும் மதக்கலவரங்கள் நடைபெறாமல் தடுக்கவே 144 தடை உத்தரவு அமல்படுத்தினோம் எனவும் இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் விசாரணையை மார்ச் 2 ஆம் தேதிக்கு உத்தரவிட்டார்.

