கடலூரில் பாமகவின் ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு! நீதிமன்றம் சொன்ன காரணம் இதுதான்!

பாட்டாளி மக்கள் கட்சியின் ஆண்டுவிழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதி அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ramadoss, high court
ramadoss, high courtfile image

பாட்டாளி மக்கள் கட்சியின் 35ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகே நாளை (ஆகஸ்ட் 30) பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி நெய்வேலி டி.எஸ்.பியிடம் விண்ணப்பித்ததாகவும், ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, ’கட்சி தொடங்கியது முதல் பல ஆண்டுகளாக அமைதியான முறையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நாளைய கூட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாராக உள்ள நிலையில் அனுமதி வழங்க மறுக்கப்படுகிறது’ என தெரிவித்தார். ’வடலூர் சந்திப்பில் அனுமதிக்காவிட்டால் குள்ளஞ்சாவடியில் பொதுக்கூட்டம் அனுமதிக்க வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதன் ஆஜராகி, ”விவசாயிகளுக்கு ஆதரவாக என்.எல்.சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தியபோது, 27 அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது உள்ளிட்ட புகார்களில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கட்சியின் செயல்பாடு வெளிப்படுகிறது. அதேஇடத்தில் தற்போது பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்பதாகவும், அனுமதி கொடுத்தால் என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராகப் பேசும்போது, மீண்டும் சட்டஒழுங்குப் பிரச்னை ஏற்படவும், காவல்துறை மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது. எனவே கடலூர் மாவட்டத்திற்கு வெளியே பொதுக்கூட்டம் நடத்தினால், அதற்கு அனுமதியளிக்க தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாமக தரப்பில், என்.எல்.சி. மட்டுமல்லாமல், கடலூர் மாவட்ட மக்களின் மற்ற அனைத்து பிரச்னைகள் குறித்தும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்,
சென்னை உயர்நீதிமன்றம்,கோப்புப் படம்

இதன்பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ”பொதுக் கூட்டம் நடத்தும் அரசியல் கட்சியின் உரிமையைத் தடுக்க முடியாது. என்றாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்த காவல்துறையின் அச்சத்தையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. ஆகையால், கடலூர் மாவட்டத்தில் பாமக பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதிக்க முடியாது” என தெரிவித்துவிட்டார்.

மேலும் அவர், “விழுப்புரம் அல்லது கள்ளகுறிச்சி மாவட்டத்தில் நடத்துவது குறித்து பாமக முடிவெடுத்து, சம்பந்தப்பட்ட காவல்துறையை அணுகலாம். அதில் அனுமதி வழங்கப்படும்பட்சத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும். அந்தப் பொதுக்கூட்டத்தில் நெய்வேலி போராட்டம் பற்றிப் பேச பேசக்கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு கட்சியினரை வழிநடத்த வேண்டிய பொறுப்பு கட்சித் தலைமைக்கு தான் உள்ளது. மீறி, பிரச்னை ஏற்பட்டால் கட்சித் தலைமையே பொறுப்பேற்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளார்.

இந்த உத்தரவைப் பிறப்பித்த பிறகு, வழக்கறிஞர் கே.பாலு குறுக்கிட்டு, ”கடலூரில் தான் கூட்டம் நடத்த திட்டமிட்டதாகவும், வேறு மாவட்டத்தில் நடத்த விருப்பமில்லை. ஆகையால், வேறு மாவட்ட காவல்துறையை அணுக மாட்டோம்” என நீதிபதியிடம் தெரிவித்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பாமக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com