பள்ளிக்கரணை சதுப்பு நில சர்ச்சை.. கட்டுமானப் பணிக்கு உயர்நீதிமன்றம் தடை!
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில், எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்டடம் கட்டஅனுமதியளிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டுமெனவும், அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் மனுதாரர் மற்றும் தமிழக அரசின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றமும், தென்மண்டல பசுமை தீர்ப்பாயமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், இந்த விவரங்கள் தெரியாமல் எப்படி சிஎம்டிஏ கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கியது எனவும் வினவினர்.
சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக வரையறுக்கும் பணிகள் முடிவடையும்முன், கட்டுமானங்களுக்கும் - வளர்ச்சித் திட்டங்களுக்கும் அனுமதி அளித்துவந்தால், ஒட்டுமொத்த சதுப்பு நிலமும் அழிந்துவிடும் எனவும் குறிப்பிட்டனர். வழக்கு தொடர்பாக வரும் 12ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு ஆணையிட்ட நீதிபதிகள், அதுவரை குறிப்பிட்ட பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கட்டுமான நிறுவனத்திற்கு ஆணையிட்டனர்.

