“நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமையுள்ளது” - சென்னை உயர்நீதிமன்றம்

நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமையுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் திமுகவின் கையெழுத்து இயக்கத்தால் என்ன பாதிப்பு என மனுதாரர் எம்.எல்.ரவிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்pt web

வழக்கறிஞரும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “திமுக மேற்கொள்ளும் கையெழுத்து இயக்கத்தில், மாணவர்களிடம் கட்டாயப்படுத்திப் கையெழுத்து வாங்கப்படுகிறது. இது சட்ட விரோதம், எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதியின் அமர்வின் போது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தின் மூலம் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து அது மாணவர் நலனுக்கு விரோதமாக அமைந்தால் பொது நல வழக்காக தொடரலாம். நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமையுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு ஒரு விஷயத்தில் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை இருந்தாலும் இதுபோன்ற பொது நல வழக்குகளை தாக்கல் செய்வதற்கு வரம்பு இருக்கிறது.

மனுதாரரின் நோக்கத்தை நிரூபிக்கும் வகையில் ஒரு லட்ச ரூபாயை டெபாசிட் செய்தால் வழக்கை விசாரிக்கிறோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்ததை அடுத்து வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்ந்து “சமுதாயத்திற்கு நலன்பயக்கும் விஷயமாக இருந்தால் அது தொடர்பாக பொது நல வழக்கு தாக்கல் செய்யலாம்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com