எம்.பி பதவியை இழந்தார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்! ‘வெற்றி செல்லாது’ என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொது தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அந்த தேர்தலில் 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

AIADMK
AIADMK

அதில், “ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பணப் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தேனி தொகுதியில் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை” என்று கூறியிருந்தார்.

அதேநேரம் “இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை ஏற்கக்கூடாது” என ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், ரவீந்திரநாத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. தொடர்ந்து மிலானி என்பவர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது. அந்த விசாரணையில் ரவீந்திரநாத், தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

அப்போது மிலானி தரப்பில், “ஓபி ரவீந்திரநாத், முதன்முறை வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு அதில் திருத்தங்களை செய்து அதன் பின் மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். அதையே தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளார். இதிலேயே சட்டவிரோதம் அதிகார துஷ்பிரயோகம் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்” என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.

தற்போது சென்னை நீதிபதி சுந்தர் அளித்துள்ள தீர்ப்பில், “தேர்தல் மனு ஏற்கப்படுகிறது. எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது” என்று அறிவித்துள்ளார்.

“தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை அமல்படுத்துவதற்குள், மேல் முறையீடு செய்யும் வரை இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்” என்ற கோரிக்கை ரவீந்திரநாத் தரப்பில் வைக்கப்பட்டது. ஓபி ரவீந்திரநாத் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வெற்றி செல்லாது என்ற தீர்ப்பினை எதிர்த்துமேல் முறையீடு செய்ய ஒரு மாத கால அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com