உலக நன்மைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வழிபாடு செய்த மத்தியப் பிரதேச முதல்வர்

உலக நன்மைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வழிபாடு செய்த மத்தியப் பிரதேச முதல்வர்
உலக நன்மைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வழிபாடு செய்த மத்தியப் பிரதேச முதல்வர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் தன் குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்திருக்கிறார். உலக நன்மைக்காக தென்னிந்தியாவில் வழிபாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்தவகையில் நேற்று ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்திருந்தார் அவர். தொடர்ந்து இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு சென்றுள்ளார்.

ஸ்ரீ ஆண்டாள் கோவில் முன்பு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், பின் ஆண்டாள் பிறந்த நந்தவனத்திலும், அதன் பின்பு வடபத்ர சயனர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தமிழக அரசின் முத்திரைச் சின்னமான ராஜகோபுரம் முன்பு தனது மனைவியுடன் படம் எடுத்துக்கொண்டார் முதல்வர் சிவராஜ் சிங்.

தொடர்ந்துசெய்தியாளர்களை சந்தித்த அவர், “உலக நன்மைக்காக தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறேன். அதன் அடிப்படையிலேயே இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்துள்ளேன். மேலும் பாரதத்தை கொரோனா என்ற கொடிய நோயை விரட்ட ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் வழிபாடு செய்துள்ளேன்” என்று கூறினார். தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றார் அவர். முன்னதாக மத்திய பிரதேச முதலமைச்சர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வருவதையொட்டி சுமார் ஒன்றரை மணி நேரம் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

- செந்தில்குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com