[X] Close

லக்கிம்பூர் வன்முறையின் தாக்கம்: உ.பி. தேர்தலில் யோகிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?!

சிறப்புக் களம்

Lakhimpur-Violence-Will-make-Impact-on-Yogi-Adityanath-Electoral-Chances

ஒன்பது பேரின் உயிர்களைப் பறித்த லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தனது தலைமையில் முதல் தேர்தலை எதிர்நோக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தொடர்பாக விரிவாகப் பார்ப்போம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை, ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த நான்கு பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது என்றால், லக்கிம்பூர் வன்முறைதான். நான்கு விவசாயிகள், மூன்று பா.ஜ.க.வினர், ஒரு ஓட்டுநர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் என ஒன்பது பேரின் உயிர்களைப் பறித்த இந்த வன்முறைச் சம்பவம் வரவிருக்கும் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

image


Advertisement

குறிப்பாக வன்முறையின் தாக்கம் பாஜகவுக்கும், யோகி ஆதித்யநாத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதே இப்போதைய மிகப்பெரிய கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் அரசியல் நோக்கர்கள், இரண்டு சம்பவங்களை நினைவுகூர்கிறார்கள். முதல் சம்பவம் 2003-ல் திக்விஜய் சிங்கின் காங்கிரஸ் அரசாங்கத்தில் நிகழ்ந்தது. 2003-ல் திக்விஜய் சிங் மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தபோது, விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் கடுமையான ஆலங்கட்டி மழையில் சேதமடைந்த ஒவ்வொரு ஹெக்டேர் பயிர்களுக்கும் ரூ.5,000 இழப்பீடு உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி பெத்துல் மாவட்டத்தில் உள்ள முல்தாய் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

அந்தப் போராட்டத்தில் விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவம் "ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட காட்டுமிராண்டித்தனமானது" என்று குற்றம்சாட்டி அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, பிரசாரம் செய்தது. விவசாயிகளின் மரணம் பாஜகவால் எடுக்கப்பட்ட முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக தேர்தல் களத்தில் எதிரொலித்தது. அந்த பிரசாரத்துக்கான விலையாக பாஜகவின் உமா பாரதியிடம் ஆட்சியை பறிகொடுத்தார் திக்விஜய் சிங்.

இதே மத்தியப் பிரதேசத்தில்தான் இரண்டாவது சம்பவம். இந்தமுறை பாஜக ஆட்சி. 2017-ல் மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சூரில் கடன் தள்ளுபடி மற்றும் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக ஊதியம் வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மிக விரைவில் அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. இங்கேயும் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. 5 விவசாயிகள் உயிரிழந்தனர். முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நீதி விசாரணை, இழப்பீடு என பல அறிவிப்புகளை வெளியிட்டு விவசாயிகளை சமாதானப்படுத்த பார்த்தார். ஆனால், இந்த முறை காங்கிரஸ் பிரசாரத்தை பாஜகவுக்கு எதிராக கடுமையாக்கியது. விவசாயிகள் உயிரிழப்பை மக்கள் மன்றத்தில் கொண்டுச் செல்ல, அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2018-ல் நடந்த தேர்தலில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்தார் சிவராஜ் சிங் சவுகான்.

image

இந்த இரண்டு சம்பவங்களிலும் நடந்த அதே காட்சிகள்தான் தற்போது லக்கிம்பூர் வன்முறையிலும் நடந்துள்ளது. அதேபோல் கலவரம் உயிரிழப்பு என்பதை தாண்டி, அதேபோல் எதிர்கட்சிகளை விவசாயிகளை சந்திக்க அனுமதி மறுத்து கைது செய்வது, தாமத நடவடிக்கை என மேலே சொன்ன இரண்டு சம்பவங்களின் தடம் மாறாமல் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அத்துடன், இம்முறை உச்ச நீதிமன்றமும் சாட்டையை சுழற்றியிருக்கிறது. எந்தவொரு மாநிலத்திலும் விவசாயிகளின் மரணம் எப்போதுமே ஓர் உணர்ச்சிகரமான பிரச்னையாக உள்ளது. அதனால் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் விரைவில் மறக்கப்பட வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வரை இப்பிரச்னை பேசப்படும்.

யோகி அரசு தங்களின் தேர்தல் வாய்ப்பை பாதிக்காமல் இருக்க சில நடவடிக்கைகளை எடுத்தாலும், எதிர்க்கட்சிகள் இந்தச் சம்பவத்தை மக்கள் மனதில் நீங்காமல் இடம்பெற வைக்க எல்லாவற்றையும் செய்வர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிராமப்புற மக்கள்தொகையில் 77 சதவிகிதத்திற்கும் மேலான பெரும்பான்மையினராக உள்ள மக்களின், குறிப்பாக விவசாயிகளின் மனதில் லக்கிம்பூர் வன்முறையை மறையவிடாமல் இருக்க எல்லா யுக்திகளையும் பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால், நிச்சயம் அது பாஜகவுக்கு பாதிப்பை தரும்.

image

இதுமட்டுமல்ல, வன்முறை சம்பவத்தில் அரசின் நடவடிக்கையும் இந்தச் அச்சத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. வன்முறையில் விவசாயிகள் உயிரிழப்புக்கு காரணமாக சொல்லப்பட்ட மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் கைது செய்யப்படவில்லை. ஏன் வழக்கே பதியவில்லை. மேலும், தலைவர்களை விவசாயிகளை சந்திக்க அனுமதிக்கவில்லை. பாஜக சார்பில் எந்தவித தலைவர்களும் விவசாயிகளை சந்திக்கவில்லை. இதுபோன்று இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுப்பதில் உத்தரப் பிரதேச அரசு மெத்தனமாக இருப்பது விவசாயிகளின் கோபத்தை தணிப்பதற்கு பதிலாக மேலும் தூண்டியிருக்கிறது. இதனால் நிச்சயம் இது வரவிருக்கும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதே உத்தரப் பிரதேச அரசியலை கவனிப்பவர்களின் பெரும்பாலானோர் கருத்தாக இருக்கிறது.

மாநிலம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், விவசாயத்தை அடிப்படையாக கொண்ட லக்கிம்பூர் கெரி மற்றும் அதை சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களில் பெரிய அளவிலான தாக்கத்தைக் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. மொத்தம் இருக்கும் 75 மாவட்டங்களில் விவசாயத்தின் மூலம் மாநில அரசுக்கு அதிக ஜிடிபியை கொண்டுவருவது லக்கிம்பூர் மாவட்டம் மட்டுமே. இந்த மாவட்ட விவசாயிகளில் பெரும்பாலோனோர் சீக்கிய மக்கள். மாநிலத்தில் இருக்கும் 6 லட்சத்துக்கும் அதிகமான சீக்கியர்களின் 15 சதவீத சீக்கியர்கள் லக்கிம்பூர் கெரியில் வசிக்கின்றனர். இதன் அருகில் உள்ள சீதாபூர், ஷாஜகான்பூர் போன்ற ஐந்து மாவட்டங்களிலும் சீக்கியர்கள் மற்றும் விவசாயிகள் அதிகம் வசிக்கின்றனர். இதனால் அவர்களிடம் தாக்கம் எதிரொலிக்கும்.

கடந்த 2017 தேர்தலில் இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள 42 தொகுதிகளில் 37 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. அதனால் தனிப்பட்ட முறையில் முதல்முறையாக தனது தலைமையில் தேர்தலை சந்திக்கும் யோகி ஆதித்யநாத்துக்கு பெரும் பாதிப்பை கொடுக்கலாம் என்று உ.பி. அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Wire

| தொடர்புடைய செய்தி: லக்கிம்பூர்: குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்யாமல் கெஞ்சுகிறீர்கள்-நீதிமன்றம் சரமாரி கேள்வி |

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close