ரூ.50 உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்.. இன்று முதல் அமல்; எதிர்ப்பு தெரிவித்த முதல்வர்!
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 2 ரூபாய் மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. இதனால் பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலை அதிகரிக்கக் கூடும் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
இந்நிலையில் கலால் வரி உயர்வால் பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலை உயராது என அவற்றை சந்தைப்படுத்தும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம், அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது.
இந்தசூழலில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று அறிவித்தார். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ” உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்பது பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது. அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.