கோவை: மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு.. தனிப்படை அமைத்து தேடும் காவல்துறை!
கோவை ஜி என் மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். மத போதகரான இவர், கிறிஸ்துவ பாடல்கள் மூலம் இளைஞர்களை கவரும் விதமாக பாடி மத போதனைகளில் ஈடுபட்டு வருகிறார். கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி, கிறிஸ்தவ மத பாடல்களை பாடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் கடந்த 2024 ம் ஆண்டு மே 21ம் தேதி தனது இல்லத்தில் நடந்த பார்ட்டி ஒன்றின்போது அதில் கலந்து கொள்ள வந்திருந்த 17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவல் வெளியான நிலையில், அனைத்து மகளிர் காவல் துறையினர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தனிப்படை அமைத்து தேடும் காவல்துறை..
விசாரணையில் வீட்டில் நடந்த பார்ட்டியின் பொழுது 17 வயது சிறுமியையும் அவருடன் இருந்த 14 வயது சிறுமியையும் பாலியல் சீண்டல் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மத்திய மகளிர் காவல் துறையினர், மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மத போதகர் ஜான் ஜெபராஜ் தலைமறைவான நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை காவல்துறையினர் கன்னியாகுமரி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத போதகர் ஜான் ஜெபராஜ் பாடிய பல மத பிரச்சார பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக இருந்து வரும் நிலையில், ஜான் ஜெபராஜ் பாலியல் சீண்டல் புகாரில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.