"கல் எங்களின் ஆயுதமல்ல, அறிவாயுதமே எங்கள் தோழர்களின் ஆயுதம்” - வேல்முருகனுக்கு தவெக லயோலா மணி பதில்!

"விஜய் ரசிகர்கள் கல்லால் அடிப்பார்கள் என்கிறார்.. எங்களை வன்முறையாளர்களாக கட்டமைக்க முயற்சி செய்கிறார்களா? நாங்கள் கோட்பாடுகளை தூக்கி உங்களுடன் சண்டை செய்ய தயாராக இருக்கிறோம்" லயோலா மணி.. தவெக
லயோலா மணி, வேல்முருகன்
லயோலா மணி, வேல்முருகன்pt web

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து பேசுகையில், “கூத்தாடிகளை தூக்கி வைத்து கொண்டாடுகிற இந்த நிலை உடைபட வேண்டும், உடைக்கப்பட வேண்டும். இப்போதுகூட நான் பேசிவிட்டு வெளியே போனால் விஜய் ரசிகர்கள் 100 பேர் என்னை கல்லால் அடிக்கக்கூடும். அப்படி அடித்தால்கூட கேட்க ஆள் இல்லை. அவர்களுக்கு (விஜய் ரசிகர்களுக்கு) யார் தியாகு, யார் பவா, அவர்களுடைய சிந்தனை என்ன, எழுத்து என்ன, சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன உள்ளிட்ட எதை குறித்தும் கவலை இல்லை” என பேசி இருந்தார்.

TVK வேல் முருகன்
TVK வேல் முருகன்முகநூல்

இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பு ஆதரவாளர், லயோலா மணி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் , “தளபதி தலைவர் அவர்களின் தம்பிகள், தங்கைகள், நலம் விரும்பிகள், ஆதரவாளர்கள், எல்லோரும் ரசிகர்கள் இல்லை. அனைவரும் தோழர்கள். நாங்கள் கல்லை கையில் எடுக்கும் வன்முறையாளர்கள் இல்லை. கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கையில் எடுக்கும் தோழர்கள், தலைவர்கள். அண்ணல் அம்பேத்கரை, தந்தை பெரியாரை, கர்ம வீரர் காமராஜரை, மேதகு தலைவரை படித்த முற்போக்காளர்கள்.

கல் எங்களின் ஆயுதமல்ல, அறிவாயுதமே எங்கள் தோழர்களின் ஆயுதம்

விமர்சனங்களை இன்முகத்துடன் கடந்து செல்லுங்கள் என்று தலைவரால் பக்குவப்படுத்தப்பட்ட பண்பாளர்கள் எங்களின் தோழர்கள். கூத்தாடி என்பது இழிவல்ல. கூத்து என்பது தமிழர்களின் பாரம்பரிய பண்பாடு. கூத்து என்பது கலை தொழில். தளபதி தலைவர் அவர்கள் நடிகர் என்பதை தாண்டி தமிழ் மண்ணின் நலன்களுக்காக போராடிய தலைவர். அவர் நடிகரல்ல தலைவர். கல் எங்களின் ஆயுதமல்ல, அறிவாயுதமே எங்கள் தோழர்களின் ஆயுதம்” என்று தெரிவித்துள்ளார்.

கோட்பாடுகளை தூக்கி உங்களுடன் சண்டை செய்ய தயாராக இருக்கிறோம்

இந்நிலையில் அவரை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதாவது, “கூத்தாடிகள் அரசியலுக்கு வரக்கூடாது என சொன்னால், திரைத்துறையினரால் உருவாக்கப்பட்ட திமுகவில் அவர் எப்படி கூட்டணியில் இருக்கலாம்?

விஜய், லயோலா மணி
விஜய், லயோலா மணிpt web

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் அவர். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்கள் நலன் சார்ந்த போராட்டக்களத்தில் துணை நின்றுள்ளார். ஈழப்பிரச்சனை, காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் பிரச்சனை என பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். அப்படிப்பட்ட நபரை கூத்தாடி கூத்தாடி என சொல்லி செய்யும் தொழிலை இழிவுபடுத்துகிறார்கள். 2026 அல்லது 2031ல் இதே வேல்முருகன் எங்கள் கட்சியுடன் கூட்டணி கூட பேச வரலாம். அப்படி இருக்கையில் எந்த முகத்துடன் வருவார்கள்.

விஜய் ரசிகர்கள் கல்லால் அடிப்பார்கள் என்கிறார்.. எங்களை வன்முறையாளர்களாக கட்டமைக்க முயற்சி செய்கிறார்களா? நாங்கள் கோட்பாடுகளை தூக்கி உங்களுடன் சண்டை செய்ய தயாராக இருக்கிறோம். பாபாசாகேப் அம்பேத்கர், பெரியார், கர்மவீரர் காமராஜர், மகாத்மா காந்தி போன்றோரை உயர்த்திக்கொண்டு சமூகநீதி, சமத்துவம் ஜனநாயகம் போன்ற சமத்துவ அரசியல் பேச தயார்.

இணையதளம் முடங்கியது உண்மை. அதேசமயத்தில் எங்கள் சமூக ஊடக பக்கங்கள் எதுவும் முடங்கவில்ல. 5 நிமிடங்களில் 10 லட்சம் பேர் இணைந்தபோது கூகுளே முடங்கிவிட்டது. இது எதார்த்தமான உண்மை. தோராயமாக 50 லட்சத்தைக் கடந்து உறுப்பினர்களாக இணைந்துவிட்டனர்” என்றார்.

வேல்முருகன் பேசியதென்ன?

நேற்று சென்னை அடையாறில் முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைப்பெற்றது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டார். அவர் பேசுகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில், “சமீபத்தில் ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். அப்படி அவர் உறுப்பினர்களை சேர்த்து வரும்போது திடீரென இணையதளமே முடங்கிவிட்டது என்று கூறுகிறார்கள்.

பத்திரிகைகள் எல்லாம் இது குறித்து கூறும்போது, ‘அவர் செயலி தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே 2லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தார்கள்’ என்கிறார்கள். அடுத்த நாள் காலையில், ஒரு பெரிய ஊடகமும், இதுகுறித்து தெரிவிக்கையில், 50 லட்சம் பேர் இதில் சேர்ந்து விட்டார்கள் என செய்தி வெளியிட்டு இருக்கிறது.

அண்ணன் திருமாவளவன், தியாகு, மணியரசன் ஆகியோர் எல்லாம், 40 ஆண்டுகளாக இந்த தமிழ்ச் சமூகத்திற்காக தூக்கு கயிற்றை முத்தமிட்டுவிட்டு ஒரு ஜோல்னா பையை மாட்டிக்கொண்டு, அதில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு டீ, பிஸ்கட், ரொட்டி கிடைத்தால் உண்பது, இல்லாவிட்டால் பட்டினி கிடந்து இந்த மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் உழைப்பது என்று வாழ்ந்து வருகின்றனர். அப்படியான எண்ணற்ற தியாகிகளை இந்த இளைஞர் சமுதாயம் தூக்கி எறிந்துவிட்டது.

இப்படி கூத்தாடிகளை தூக்கி வைத்து கொண்டாடுகிற இந்த நிலை உடைபட வேண்டும், உடைக்கப்பட வேண்டும். இப்போதுகூட நான் பேசிவிட்டு வெளியே போனால் விஜய் ரசிகர்கள் 100 பேர் என்னை கல்லால் அடிக்கக்கூடும். அப்படி அடித்தால்கூட கேட்க ஆள் இல்லை. அவர்களுக்கு (விஜய் ரசிகர்களுக்கு) யார் தியாகு, யார் பவா, அவர்களுடைய சிந்தனை என்ன, எழுத்து என்ன, சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன உள்ளிட்ட எதை குறித்தும் கவலை இல்லை.

‘உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு’ என்று கூறினார்கள். அப்படிப்பட்ட ரஜினியின் பாபா பட பெட்டிகள் எல்லாம் என் முந்திரி காட்டில்தான் இருந்தன. அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டாரையும் எதிர்த்துதான் 43 ஆண்டுகளாக அரசியல் களத்தில் நிற்கிறேன் நான்” என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com