வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த செய்தித் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 28ஆம் தேதி வரை மழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடுமெனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விடியவிடிய கனமழை
இதற்கிடையே, நேற்று அதிகாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பின்னர் வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு முதல் விடியவிடிய சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் எங்கும் பரவலாக கனமழை பெய்தது. சென்னையை அடுத்த அம்பத்தூரில் கனமழை காரணமாக கழிவுநீர் வடிகால் நிரம்பி, சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஆறுபோல் பெருக்கெடுத்தது. மேலும், இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி பொது மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது. சென்னையைத் தவிர்த்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஓசூர், மத்திகிரி, ஜுஜுவாடி, பாகலூர், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு
இந்த நிலையில், சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியாளர் வரலட்சுமி என்பவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். தேங்கியிருந்த மழைநீரில் அவர் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து, மின்சார வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.