“மக்கள் பிரச்னையை பேசுவதைவிட்டு பெரியார் பற்றி தொடர்ந்து பேசுவது தேவையற்றது” - கார்த்தி சிதம்பரம்
தமிழகத்தில் சமீபகாலமாக பெரியார் குறித்து சர்ச்சை பேச்சுகள் அதிகரித்து வருகின்றனர். இதுதொடர்பாக கண்டனங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டையில் இன்று பேசிய அவர், ”பெரியார் சர்ச்சை தேவையில்லாதது, இந்தியாவில் பேச வேண்டிய நிறைய பிரச்சனைகள் உள்ளது. வேலை வாய்ப்பின்மை, அன்றாடம் வாழக்கூடிய பொதுமக்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்க கூடிய பிரச்சனைகள் என பல பிரச்சனைகள் உள்ளது. அதைவிடுத்து என்ன உணவு சாப்பிட வேண்டும், தனிமனிதனின் நம்பிக்கைகள் இதெல்லாம் தான் சர்ச்சையாகிறது. எதை பற்றி பேச வேண்டுமோ அதைப்பற்றி பேசுவது கிடையாது.
சினிமாவில் கௌரவம் வேஷம் போடுவது போன்று அவ்வப்போது விஜய் வெளியே வந்து தலை காட்டிச் செல்கிறார். ஏர்போர்ட்டுக்காக வெளியே வந்தார். ஏர்போர்ட் வேண்டாம் என்று கூறினார். வேறு எங்கு ஏர்போர்ட் வைக்க வேண்டும் என்று கூறவில்லை.
பாஜகவோடு கூட்டணி சேர யாரும் விரும்பவில்லை. பல்வேறு விதங்களில் கூட்டணி சேருவதற்கு முயற்சி செய்கின்றனர்.
தமிழகத்தில் மணல் குவாரியாக இருந்தாலும் சரி, கல்குவாரி ஆக இருந்தாலும் சரி, மாஃபியாக்கள் மூலம் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றன.
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையில் எது உண்மை இல்லை என்பதை திருமாவளவன் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தி சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பெற வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் சமுதாய ரீதியான பிரச்சனைகள் இருப்பது வேறு. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வரவில்லை என்றால், அவர் ஒரு கட்சித் தலைவராக இருந்து அந்த கட்சி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அந்த கட்சியின் தலைவர் முதலமைச்சர் ஆகிவிடலாம். அதுதான் வழி, வேறு வழி இல்லை. அதனால் சமுதாயரீதியாக ஒருவரை முதலமைச்சராக வர விடமாட்டார்கள் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
குறிப்பாக, சில ஊராட்சிகளில் இதுபோன்ற புறக்கணிப்புகள் இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். அந்த புறக்கணிப்பு போக வேண்டும் என்றால் பொருளாதார ரீதியாக போக வேண்டும். சமுதாய ரீதியாக என்ன மாற்றம் வர வேண்டும் என்றாலும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அனைத்து மக்களுக்கும் வந்துவிட்டது என்றால் போகப் போக இந்த சமுதாய வேறுபாடுகளும் போய்விடும்” என்றார்.