தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் - முதலமைச்சரின் பதிலுக்கு இபிஎஸ் ரியாக்சன்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அறிக்கை வெளியிட்டும், ஊடகங்களுக்கு பேட்டியளித்தும் வந்தார். இந்த நிலையில், தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களுக்கு வழங்கும் திட்டங்கள் மற்றும் மக்களுக்கான பிரச்சினையை தொடர்ந்து பேசி வருவதால் எதிர்க்கட்சித் தலைவருக்கு வயிறு எரிவதாக தெரிவித்திருந்தார்.
முதல்வரின் இந்த பேச்சுக்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் தனது அறிக்கைகள் முதல்வர் ஸ்டாலினை மிகவும் உறுத்துவதாக விமர்சித்துள்ளார். ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், வாய்க்கு வந்த ரீல்களை அளந்துவிடுவதுதான் அரைவேக்காடுத்தனம் எனக் கூறியுள்ளார். மீதேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தந்த முதல்வர், டெல்டாவில் கால் வைக்க கூச்சப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, உட்கட்சி, கூட்டணிப் பூசல் சத்தமெல்லாம் அறிவாலயத்தில் இருந்து கேட்பதாகத்தானே செய்திகள் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், எந்த நாடாக இருந்தாலும் வளர்ந்த சமுதாயத்தில் குற்றங்கள் நிகழ்வது அதிகம். ஆனால் குற்றங்களை கண்டுபிடித்து தடுத்தால் தான் அது நல்ல அரசு. அதனைத் தான் தமிழக அரசு செய்து வருவதாக தெரிவித்தார்.