மே 1 | உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டங்கள்.. அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
உலகை வடிவமைப்பவர்களாகவும், வடிவமைத்தவர்களாகவும் உழைப்பாளர்களே இருந்து வந்திருக்கின்றனர். அவர்களின் தியாகத்தை கொண்டாடும் வகையிலும், உழைப்பாளர்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மே-1 ம் தேதி தொழிலாளர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தசூழலில் தான், மே 1-ம் தேதியான இன்று, தொழிலாளர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
”உழைப்பு மனித சமூக வளர்ச்சியின் அடிப்படை சக்தி” - ஸ்டாலின்
முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உழைப்பு மனித சமூக வளர்ச்சியின் அடிப்படை சக்தி எனவும் தொழிலாளர்களுக்கான மே நாள் ஊதிய விடுமுறை, நல வாரியம் போன்ற திட்டங்கள் அறிஞர் அண்ணா மற்றும் மு. கருணாநிதி ஆட்சிகளில் அறிமுகமானதாகவும், தற்போதைய ஆட்சியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மானியம் உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
”அடிமை விலங்கினை உடைத்தெறிந்த திருநாள்” - கே. பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான கே. பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உழைக்கும் கரங்களின் ஒற்றுமை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் திளயாகிய 'மே' தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைகளுகாகவும், நலனிற்காகவும் பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த திருநாள் மே தின திருநாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்” - பெ. சண்முகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”உழைப்பவருக்கே உலகம் உரியது என்று எட்டுத் திசையிலும் கொட்டி முழக்கமிடுவதே மே தினமாகும். எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்பதைக் குருதி சிந்தி, உயிர் நீத்து போராடிப் பெற்றுக் கொடுத்த தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான தியாகிகளுக்கு வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இன்றும் உலகம் உயிர்ப்புடன் இயங்கிட கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை எதிர்த்து போராட வேண்டும்” - திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உழைப்பைப் போற்றும் உன்னத நாளான மே நாளில், உலகத் தொழிலாளர்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் புதிய புதிய வடிவங்களில் தீவிரப்படுத்தி வருகிறது. அதானி அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்காக பாஜக அரசு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 44 வகையான தொழிலாளர் சட்டங்களையெல்லாம், இவை நான்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை முன்னிறுத்தியே உருவாக்கப் பட்டுள்ளன. தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மோடி அரசு திரும்பப் பெறும் வரையில் அவற்றை எதிர்த்துப் போராட உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
”பாட்டாளிகளின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட நாள்” - அன்புமணி
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சுரண்டல்வாதிகளை ஒழித்து பாட்டாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைத்துக் கொடுக்க தொழிலாளர் நாளில் உறுதியேற்றுக் கொள்வோம். உலகை உயர்த்த உழைக்கும் பாட்டாளிகளின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட நாளான மே நாளைக் கொண்டாடும் பாட்டாளிகள் அனைவருக்கும் தொழிலாளர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”மே தின வாழ்த்துக்கள்” - டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”உழைக்கும் வர்க்கத்தினர் தங்களின் உரிமைகளை வென்றெடுத்து உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்திய மே தினமான இந்நாளில் உலகெங்கும் உள்ள உழைப்பாளர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

