சில்லென்று துவங்கியது மே மாதம்.. கருமேகங்கள் சூழ்ந்த காலை வேளை!
மே 4 ஆம் தேதி தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில், மே மாதத்தின் முதல் நாளான இன்று சில்லென்று குளிர்ந்த காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்து காலை வேளை தொடங்கியுள்ளது. இராணிப்பேட்டை, திருத்தணி, வேலூர் உள்ளிட்ட சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் உருவான இடி மழை மேகங்களால், குளிர்ந்த காற்றுடன் மேகமூட்டமான சூழல் சென்னையில் காணப்படுகிறது.
நேற்று பகலில் பல இடங்களில் வெயில் கொளுத்திய நிலையில், நேற்று மாலை முதல் இரவு வரை திருநெல்வேலி, தேனி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, வேலூர், இராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. பழனி போன்ற ஒருசில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பதிவானது.
நேற்று, சென்னை மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெப்பம் பதிவாகி வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான காற்றுடன் கூடிய சில்லென்ற வானிலை சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நிலவுகிறது. தற்போது மழை பெய்யும் வேலூர் திருவள்ளூர் ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் தரைக்காற்று குளிர்ந்து, குளிர்காற்றாக வீசுகிறது.
தற்போது நிலவும் கரு மேகமூட்டங்கள் அடுத்த சில மணி நேரங்களில் விலகி படிப்படியாக வெயில் அதிகரிக்கும் எனவும் மே மாதத்தில் வெப்பச்சலன மழை தீவிரமடைந்து, இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

