பெற்றோருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் சொன்ன தென்காசி கிருத்திகா! முழு விவரம்

பெற்றோருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் சொன்ன தென்காசி கிருத்திகா! முழு விவரம்
பெற்றோருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் சொன்ன தென்காசி கிருத்திகா! முழு விவரம்

“கிருத்திகாவிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் படி அவர் தனது பெற்றோருடன் செல்வதாகத் தெரிவித்துள்ளார்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தென்காசி அருகே கொட்டாகுளம் இசக்கியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் நான் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறேன். இலஞ்சி தென்றல் நகரைச் சோர்ந்தவர் நவீன் பட்டேல் என்பவரின் மகள் கிருத்திகா பட்டேலும், நானும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் கடந்த 27-12-2022 அன்று நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.

இதற்கிடையில் தன்னுடைய மகளை காணவில்லை எனக் கூறி நவீன் பட்டேல் குற்றாம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதனையடுத்து 4-1-23 அன்று நானும் எனது மனைவி கிருத்திகா பட்டேலும் குற்றாலம் காவல் நிலையத்தில் ஆஜரானோம். விசாரணையின் முடிவில் கிருத்திகா பட்டேல், கணவரான என்னுடன் செல்வதாகக் கூறியதையடுத்து என்னுடன் அழைத்துச் சென்றேன்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதியன்று என்னுடைய மனைவியுடன் தென்காசியில் மருத்துவமனைக்குச் சென்றேன். அப்போது அங்கு வந்த நவீன் பட்டேல் மற்றும் அவருடைய மனைவி தார்மிஸ்தா பட்டேல் ஆகியோர் என்னுடன் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து இது குறித்து நான் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் செய்தேன்.

இந்த புகார் மனுவின் மீதான விசாரணைக்காக ஜனவரி 25ஆம் தேதி நான் என் மனைவி, தந்தை சகோதரார் விஷால் ஆகியோருடன் குற்றாலம் காவல் நிலையத்தில் ஆஜரானேன். ஆனால், நவீன் பட்டேல் மாலையில் காவல்நிலையம் வருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து நான் எனது குடும்பத்தினருடன் காரில் கொட்டாகுளத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது, நவீன் பட்டேல், அவருடைய மனைவி தார்மிஸ்தா பட்டேல் ஆகியோர் என்னை தாக்கிவிட்டு எனது மனைவி கிருத்திகா பட்டேலை கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து நான், குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தேன், புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கிருத்திகா பட்டேலை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் கிருத்திகா பட்டேலை கடத்திச் சென்று விட்டனர். எனவே, கிருத்திகா பட்டேலை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், மனுதாரர் மாரியப்பன் வினித், திருமண புகைப்படங்களை காட்டி கிருத்திகாவிடம் நீதிபதிகள் விசாரணை செய்தனர். அதைத்தொடர்ந்து “கிருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும். கிருத்திகாவை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் பெற வேண்டும். கிருத்திகா-வின் பாதுகாப்பு மிக முக்கியம். பெற்றோர் கிருத்திகா-வை பார்க்க அனுமதிக்க வேண்டும். பெற்றோர் கட்டாயப்படுத்தாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என கூறியிருந்தனர்.

இந்த மனு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தென்காசி நீதிமன்றத்தில், கிருத்திகா பட்டேலிடம் பெறப்பட்ட விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தென்காசி காவல்துறையினர் தாக்கல் செய்தனர். இதனையடுத்து நீதிபதிகள், கிருத்திகா பட்டேலிடம் பெறப்பட்ட விசாரணையில் பெற்றோருடன் செல்வதாகத் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டனர்.

மனுதாரர் தரப்பில், கிருத்திகா பட்டேலிடம் பெறப்பட்ட விசாரணை முறையாக இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், “ஆட்கொணர்வு மனுவை பொருத்தவரையில் பெண் யாருடன் செல்வதாக தெரிவிக்கிறாரோ அவருடன் தான் அனுப்பப்படுவார்” என தெரிவித்தனர். அரசு தரப்பில், கிருத்திகாவின் பெற்றோர்கள் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உறவினர்களிடம் கிருத்திகாவை ஒப்படைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், கிருத்திகா உறவினர்கள் தரப்பில் கிருத்திகாவை அழைத்துச் செல்வதாக மனு செய்யவும் அதனை காவல்துறையினர் முறையாக விசாரணை செய்ய வேண்டும் எனவும், கிருத்திகா பாதுகாப்பு மிக முக்கியம் எனக்கூறி வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்துள்ளனர். மேலும் கிருத்திகாவின் பெற்றோர் தரப்பில், இந்த விவகாரத்தில் மீடியாக்கள் மீது புகார் தெரிவித்தனர். அதற்கு நீதிபதிகள், “அது நீங்களாக விருப்பப்பட்டு செய்தது. இதில் மீடியாக்களை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை” என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com