Published : 07,Feb 2023 10:52 PM

தென்காசி: பெற்றோரால் கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட கிருத்திகா வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

What-has-happened-so-far-in-the-case-of-Tenkasi-Krithika--who-was-allegedly-abducted-by-her-parents

தென்காசியில் தன் வீட்டாரால் கடத்தப்பட்டு பின் தேடப்பட்டு வந்த புதுமணப்பெண்ணின் வழக்கில், அப்பெண்ணை காப்பகத்தில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணத்தில் முடிந்த பள்ளிக்காதல்!

தென்காசி மாவட்டம் கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்த வினித்தும், அதே பகுதியில் உள்ள வேறு சமூகத்தை சேர்ந்த நவீன் என்பவர் மகள் கிருத்திகாவும் ஒரே பள்ளியில் பயின்ற போது காதலித்து வந்ததாகவும், சுமார் 6 வருடம் இவர்கள் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்ற ஆண்டில் வினித்துக்கு கல்லூரி முடிந்துள்ளது. படிப்பு முடிந்த கையுடன், வினித் சென்னையில் பணிக்கு சேர்ந்துள்ளார். தொடர்ந்து கடந்த 26.12.2022 அன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கன்னியாகுமாரியில் 27 ம் தேதியன்று நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் முன்னிலையில் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

”மகளை காணவில்லை” - பெற்றோர் புகார்!

பின் கடந்த 04.01.23 அன்று, தங்கள் மகளை காணவில்லை என குற்றாலம் காவல் நிலையத்தில் பெண்ணின் வீட்டார் புகாரளித்துள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினர் இருவரிடமும் விசாரித்ததாகவும், அப்போது அப்பெண் `கணவனுடனே செல்வேன்’ என கூறியதாகவும், `பெண்ணிற்கும் தனக்கும் சம்பந்தமில்லை’ என கூறி பெண் வீட்டார்கள் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வினித் தரப்பிலிருந்து, `பெண் வீட்டாரால் எங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ என முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

கிருத்திகாவை தரதரவென இழுத்துச் சென்ற அவலம்!

அதன் அடிப்படையில் விசாரணைக்கு இருதரப்பினரும் காவல் நிலையம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதில் வினித் வீட்டாரும், கிருத்திகாவும் வந்துள்ளனர். நீண்ட நேரம் காத்திருந்தும் கிருத்திகா வீட்டார் வராததால் சென்று உணவருந்திவிட்டு வருமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். அப்போது அவர்கள் தென்காசியின் குத்துக்கல் வலசை அருகே காரில் சென்ற போது, பெண் வீட்டார் அவர்கள் சென்ற காரை வழிமறித்தனர். தொடர்ந்து கிருத்திகாவை தூக்க முயற்சிக்கும் போது அருகே உள்ள ஷாமில்லுக்குள் கிருத்திகா தப்பித்து ஓடியுள்ளார். அங்கு சென்று கிருத்திகா வீட்டார், அவரை தரதரவென தூக்கி சென்றனர். இவையாவும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி, வெளியானது. பார்ப்போரை அச்சுறுத்தும் வகையிலான அக்காட்சிகள் வெளியானதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.

”மனைவியை காணவில்லை” - வினித் புகார்

அதனை அடுத்து வினித் தரப்பினர், தன் மனைவியை அவரது வீட்டார் வாகனத்தை மறித்து தாக்கி கடத்தி சென்றதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கிருத்திகாவின் தந்தை நவீன் படேல் உட்பட ஏழு பேர் மீது ஆள் கடத்தல், கொலைமிரட்டல், உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கிருத்திகாவை தேடி வந்தனர். பின்னர் இவ்வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

”எனக்கு வேறொருவருடன் திருமணம் ஆகிவிட்டது” - கிருத்திகா அதிர்ச்சி வீடியோ

இந்த நிலையில் அந்த பெண் (கிருத்திகா) பேசும் வீடியோ வெளியானது. அதில் ஏற்கனவே தான் வேறு ஒருவருடன் மணமாணவர் எனவும், தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.`எல்லாம் என்னாலேயே நிக்ழ்ந்தது. என் விருப்பபடியே நடந்தது’ எனவும் கூறுகிறார் அவர். அவர் குறிப்பிட்டுள்ள அந்நபர், அவர் சார்ந்த அதே சமூகத்தை சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவில் அவர், “எனக்கு மைத்ரிக்குடன் திருமணமாகிவிட்டது. நான் அவருடனும் என் பெற்றோருடனும் வசித்து வருகின்றேன். எனக்கு எந்தவிதமான அழுத்தமோ, டார்ச்சரோ தரப்படவில்லை. இதுக்கு சம்பந்தப்பட்டு, எங்காவது ஏதாவது பிரச்னை நடந்தால், அது எதுவும் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இங்கு எல்லாம் என் சம்மதத்துடனேயே நடந்தது” என்றார்.

”கிருத்திகாவை மீட்டு தாருங்கள்” - ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த வினித்!

இதனால் அதுவரை கிருத்திகாவின் கணவர் என செய்திகளில் குறிப்பிடப்பட்ட தென்காசி மாவட்டம்  கொட்டா குளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்

அதில் "தென்காசி மாவட்டம் இலஞ்சியைச் சேர்ந்த கிருத்திகா என்பவரை காதலித்து வந்தேன். கிருத்திகா அவரது முழு சம்மதத்துடன் எனது வீட்டிற்கு வந்தார். எனது பெற்றோர்கள் முன்னிலையில் கிருத்திகாவுக்கும் எனக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் கடந்த 25ம் தேதி அவரது பெற்றோர் என்னை தாக்கி விட்டு கிருத்திகாவை கடத்திச் சென்று விட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் கிருத்திகாவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிருத்திகாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என  கூறியிருந்தார்.

image

நீதிமன்ற விசாரணையின் போது..

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், அரசு தரப்பில், “மனுதாரரின் புகாரின் அடிப்படையில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடி வருகிறோம். மேலும் கடத்தப்பட்ட பெண்ணை மீட்பது சம்பந்தமாக 2 தனிப்படையினர் குஜராத் சென்று தேடி வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கிருத்திகாவை தென்காசி காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதிகள், `குஜராத்தில் திருமணம் செய்த மேத்திரிக் பட்டேல் கைது செய்யப்பட்டாரா?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு, காவல் துறை தரப்பில், அவர் தலை மறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு “கிருத்திகா கடத்தப்பட்டத்தில் இருவிதமான கதைகள் உள்ளன. உண்மையை கண்டறிய சம்மந்தப்பட்ட பெண், விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு செய்ய வேண்டும் அதன் பின்பே உண்மை தெரியவரும்” எனவும் குறிப்பிட்டனர்.

அதையடுத்து நீதிபதிகள், “மனுதாரர் திருமணம் செய்ததற்கான ஆவணங்கள் உள்ளதா? வயது என்ன?” என கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில், 22 வயது எனக்கூறி திருமணம் நடந்ததற்கான புகைப்படம் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரர் மாரியப்பன் வினித் சமர்ப்பித்த திருமண புகைப்படங்கள் காட்டி கிருத்திகாவிடம்  விசாரணை செய்தனர்.

காப்பகத்தில் கிருத்திகா! ஆனால்..

அதன்பின்பு நீதிபதிகள், “கிருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நடந்தது தொடர்பாக சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும். கிருத்திகா-வை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்கு மூலம் பெற வேண்டும். இதில் கிருத்திகாவின் பாதுகாப்பு மிக முக்கியம். பெற்றோர் கிருத்திகாவை பார்க்க அனுமதிக்க வேண்டும். பெற்றோர் கட்டாயப்படுத்தாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்