அதிமுகவுடன் அதிருப்தி.. தவெக-உடன் கூட்டணி? 12 தொகுதிகளில் களமிறங்கும் கிருஷ்ணசாமி!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 நெருங்கிவரும் சூழலில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியிலும் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டது. போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த சூழலில்தான், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டது. இம்முறை, அதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத சூழலில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் பிரதான எதிர்க் கட்சியாக 63 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கக்கூடிய அதிமுக ஒரு போராட்டத்தைக்கூட நடத்தவில்லை. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சட்டப் போராட்டம் உள்ளிட்ட பல தொடர் போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். எனினும், தொடர்ச்சியாக 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முயற்சி எடுத்தோம்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி புதிய தமிழகம் கட்சிக்கான உரிய மதிப்பை, மரியாதையை, கவுரவத்தை அளிக்க தயாராக இல்லை. அமித் ஷா எப்படி ஆனாலும் தன்னை முதல்வராக்கிவிடுவார் என்ற நம்பிக்கையில் பழனிசாமி இருக்கிறார். அதேசமயம், தான் மட்டும் எப்படியாவது வெற்றி பெற்றால் போதும் என்று பாஜகவிற்கு வெற்றிபெற முடியாத 27 தொகுதிகளைக் கொடுத்துள்ளார். அதற்கான விலையை அவர் அனுபவிக்க வேண்டி இருக்கும். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் கூட்டணி வைத்ததுபோல் தெரியவில்லை; தன்னைச் சுற்றி இருக்கக்கூடிய 40-45 பேர் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில்தான் அவர் இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, ’’தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா?’’ எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பதிலளித்துப் பேசிய அவர், ’’தவெகவினர் முயற்சி எடுத்தால் கூட்டணியில் இணைவதற்கு பரிசீலிப்போம்’’ எனத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும், வெற்றி வாய்ப்புள்ள 60-70 தொகுதிகள் கண்டறிந்துள்ளோம். குறைந்தது பத்து முதல் 12 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம். நாளை உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தியபின் முடிவு செய்யப்படும். நாளை மறுநாள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்” என்றார்.
கடந்த, 2021 தேர்தலில் 60 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டிருந்த புதிய தமிழகம் கட்சி, பல தொகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த சூழலில், இம்முறையும் தனித்துப் போட்டியிடுவதன் மூலம், யாருடைய வாக்குகளைப் பிரிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

