
கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜுவல்லரி எனும் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான சுரேஷ் என்பவர், கிருஷ்ணகிரி நகர வணிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி காந்திநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் இன்று காலை 7 மணியளவில் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தடயவியல் துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தொழிலதிபர் சுரேஷ் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. இருப்பினும் அவருக்கு சமீபகாலமாக நிலம் முதலீடு மற்றும் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் ஏற்கெனவே இந்த முடிவை எடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இவற்றை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.