சிவசேனா சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏக்நாத் ஷிண்டே!
மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் சட்டமன்றத் தலைவராக ஏக்நாத் ஷிண்டே ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில், சட்டமன்றத் தலைவராக ஏக்நாத் ஷிண்டேவை தேர்வு செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதற்கு அனைத்து எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு அளித்த நிலையில், சிவசேனா கட்சியின் சட்டமன்றத் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டார். அதேநேரத்தில் முதலமைச்சர் பதவி, அமைச்சரவை தேர்வு, பதவியேற்பு விழா தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு ஏக்நாத் ஷிண்டேவிற்கு அனைத்து அதிகாரம் வழங்கும் தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே, டெல்லி செல்லும் ஷிண்டே, மகாயுதி கூட்டணி தலைவர்களை இன்று சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 57 இடங்களில் வெற்றி பெற்றது. அதேசமயம் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.