புதுக்கோட்டை | கொடும்பாளூர் அகழாய்வு பணி நிறுத்தமா? - மத்திய தொல்லியல் துறை கொடுத்த விளக்கம்
செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் வரலாற்றுச் சிறப்புமிக்க முசுகுந்தேஸ்வரர், மூவர் கோயில் உள்ளது. மேலும், ஐவர் கோயில் இருந்ததற்கான கட்டுமானமும் உள்ள இப்பகுதி மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொடும்பாளூர் உட்பட 32 இடங்களில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்வது குறித்து கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. அதில், முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் எச்சங்கள் நிறைந்த இடமாக கொடும்பாளூர் அறியப்படுகிறது.
இங்கு மத்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்ட கண்காணிப்பாளரும், கொடும்பாளூர் அகழாய்வுப் பணி இயக்குநருமான அனில்குமார் தலைமையில், துணை இயக்குநர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி அகழாய்வு பணியை தொடங்கினர். மூவர் கோயிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலும், முசுகுந்தேஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிலும் உள்ள அக்ரஹாரம் மேட்டுப் பகுதியில் 10 மீட்டர் நீள, அகலத்தில் 6 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 6 மாதங்களாக இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் நூறாண்டுகளுக்கு முந்தைய அக்ரஹார கட்டுமான சுவர், சுமார் 45 செ.மீட்டர் ஆழத்தில் கருங்கல் சுவர், 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க அணிகளான மணி, 10ஆம்; நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள் அதற்கு முந்தைய காலகட்டத்தில் பாசிமணிகள் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொடும்பாளூர் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், அதனை மறுத்துள்ள மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள், மழையின் காரணமாக அகழாய்வு குழிகளை மட்டும் தார்ப்பாய் கொண்டு மூடியுள்ளதாகவும், அதே வேளையில் அங்கு தொடர்ந்து அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வார காலத்தில் மீண்டும் அங்கு அகழாய் பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.