உரிய நேரத்தில் கிடைக்காத சிகிச்சை..இறந்து பிறந்த சிசு; துணிகூட சுற்றாமல் கொடுத்த அவலம்-நடந்தது என்ன?

சென்னையில் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் இறந்த குழந்தையின் உடலை துணி சுற்றாமல் கொடுத்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட தந்தை
பாதிக்கப்பட்ட தந்தைpt web

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மசூத் என்பவரின் மனைவி சௌமியாவிற்கு, டிசம்பர் 5ஆம் தேதி குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழையின் தாக்கத்தால் மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் கிடைக்காத நிலையில் வெகுநேரம் போராடி புளியந்தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த மருத்துவமனை பூட்டப்பட்டிருந்த நிலையில் சிசு இறந்தது. இதைத் தொடர்ந்து தாய்க்கு சிகிச்சையளிக்க காவல்துறையினர் உதவியுடன் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சையளிக்க கருவிகளும் மருத்துவரும் இருந்தாலும்  மின்சாரம் இல்லாததால் சிகிச்சையளிக்க முடியவில்லை என்கிறார் இறந்த சிசுவின் தந்தை மசூத்.

முதல் குழந்தை பிறந்த போதும்  இதே போன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் சூழல் இருந்த நிலையில் அப்போது எப்படியோ காப்பாற்றிவிட்டதாக கூறுகிறார். ஒருவழியாக ஆம்புலன்ஸ்  கிடைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாயை அனுமதித்தார் மசூத்.

மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்ட சிசுவின் உடல் திரும்ப மசூதிடம் ஒப்படைக்க  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் 2500 ரூபாய்  பணம்  கேட்டுள்ளனர். பின்னர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலையீட்டிற்குப் பிறகு, குழந்தையின் உடல் டிசம்பர் 10 ஆம் தேதியன்று  மசூத்திடம், அட்டைப்பெட்டியில் வைத்து முறையாக துணிகளை கூட சுற்றாமல் மனிதாபிமானமற்ற முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இது குறித்து மருத்துவமனை டீன் முத்துச்செல்வன் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “வீட்டிலேயே குழந்தையை இறந்த நிலையில் பெற்றெடுத்து தாயும் சேயும் 6/12/23 அன்று மருத்துவமனையில் உள்நோயளியாக அனுமதிக்கப்பட்டனர். குழந்தை நல மருத்துவர் குழந்தையின் உடலை முழுவதுமாக பரிசோதனை செய்து பார்த்ததில், குழந்தை இறந்ததை உறுதி செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை அறையில் வைத்தார்கள். காவல்துறையின் விசாரணைக்குப் பின் குழந்தை இயற்கை முறையில் இறந்துள்ளது. பிரேத பரிசோதனை ஏதும் தேவையில்லை என்ற கருத்தின் அடிப்படையில் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தோம்.

அப்படி ஒப்படைக்கும் போது விதிகளுக்கு முரணாக அட்டைப்பெட்டியில் வைத்து பிணவறை உதவியாளர் குழந்தையை ஒப்படைத்தது எனக்கு தெரியவந்த உடன், சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரையின் படியும், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆலோசனை படியும், பிணவறை உதவியாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளோம். விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. உண்மை நிலைகளின் படி விதிகளுக்கு ஏற்ப மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காத படி, தீவிர கண்காணிப்பை செய்யச்சொல்லி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து செய்வோம். 2500 ரூபாய் கேட்டது தொடர்பாகவும் விசாரணைக் குழு அமைத்துள்ளோம். விசாரணையின் முடிவில் தான் உண்மையான நிலவரம் தெரியும். அதற்குத் தகுந்த அரசு விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

குழந்தையின் தந்தை மசூத் இது குறித்து பேசும் போது, “குழந்தையை அட்டைப்பெட்டியுடன் தான் கொடுத்தார்கள். துணி ஏதும் கொடுக்கவில்லை. நாங்கள் தான் எங்கள் மசூதி மூலமாக துணிகளை ஏற்பாடு செய்தோம்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com