
கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்து வரும் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
தேவாலயத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் ஒரு பெண் உயிரிழப்பு, 7 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, கோவையில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள முக்கியமான தேவாலயங்களுக்கு ஒரு காவலர் என காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.
மாநகர், மாவட்ட காவல்துறை தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக 20 ரோந்து வாகனங்கள் மூலமாக கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
கொடைகரை காவல்நிலையத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கு தான் தான் காரணம் என்று தெரிவித்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்நிலையத்திற்கு வந்த நபர் கொச்சி பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
அதேபோல், கண்ணூர் ரயில் நிலையத்தில் குஜராத்தை சேர்ந்த ஒருவரிடம் விசாரித்தபோது அவர் அளித்த பதிலில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் குஜராத்தை சேர்ந்த நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.