\
Tamil Nadu Audit Report Flags Financial Misuse and Negligence
சென்னை மாநகராட்சிPt web

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் நிதி முறைகேடுகள்.. தணிக்கை அறிக்கையின் அதிர்ச்சித் தகவல்கள்!!

சென்னை மாநகராட்சியில் திறந்தவெளி டெண்டர் இல்லாமலும், விதிகளை மீறியும் 20 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
Published on: 

தமிழக உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுள்ள நிதி வீணடிப்பு, கையாடல், அலட்சியப் போக்குகள் குறித்த அதிர்ச்சித் தகவல்கள், தணிக்கை அறிக்கையில் வெளியாகியுள்ளன.

2024–25ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த தணிக்கை அறிக்கையில், 6ஆயிரத்து 770 கோடி ரூபாய் மதிப்பிலான ஆட்சேபனைகள் எழுப்பப்பட்ட நிலையில், வெறும் 1 கோடியே 28 லட்ச ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம், பல்வேறு அமைப்புகளில் மொத்தம் 163 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் உள்ளாட்சி அமைப்புகளில் 86 கோடியே 24 லட்ச ரூபாயும், பல்கலைக்கழகங்களில் 43 கோடியே 82 லட்சமும் வீணாகியுள்ளன. சென்னை மாநகராட்சியில் திறந்தவெளி டெண்டர் இல்லாமலும், விதிகளை மீறியும் 20 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

துப்புரவுப் பணி
துப்புரவுப் பணிX

மேலும், துப்புரவுப் பணியாளர்களை அலுவலகப் பணிகளுக்குப் பயன்படுத்தியதால் 4 கோடியே 12 லட்ச ரூபாயும், மூடப்பட்ட உர மையங்களுக்கு பராமரிப்பு செலவு காட்டியதால் 2 கோடியே 12 லட்ச ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களிடம் குறைந்த அளவில் குடிநீர், பாதாள சாக்கடை வரி வசூலித்ததால் 38 கோடியெ 96 லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் மட்டும் 32 கோடியே 49 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வேலூர் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளர்களின் பி.எஃப். தொகையைச் செலுத்தாமல், போலி செலான் பயன்படுத்தி 3 கோடியே 22 லட்ச ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதேபோல், திடக்கழிவு மேலாண்மை வாகனங்களுக்கு வாடகை பிடிக்காததால் 7 கோடியே 66 லட்ச ரூபாயும், ஜி.எஸ்.டி. செலுத்தியதால் 14 கோடியெ 28 லட்ச ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பேரூராட்சிகளில் 'அம்ரூத் குடிநீர் 2.0' திட்டத்தில் தரமில்லாத குழாய்களை பொருத்தியதால், 3 கோடியே 86 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் 'ஆன்லைன்' வழியே வசூலிக்கப்பட்ட 3 கோடியே 99 லட்ச ரூபாய் அரசு கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Tamil Nadu Audit Report Flags Financial Misuse and Negligence
'உடனடியாக நடவடிக்கை எடுங்க..' - விஜய் அரசை விமர்சித்த நடிகர் கார்த்தி?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com