கரூர் | செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்.. எம்.எல்.ஏ பழனியாண்டிக்குப் பிணை!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல் குவாரி ஒன்று உள்ளது. இந்தக் கல்குவாரியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபஸ்டின் ஆகியோர் செய்தி எடுக்கச் சென்றனர். அப்போது, கல்குவாரியில் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாகக் கூறி டரோன் காமிராக்கள் மூலம் படம் பிடிக்க முற்பட்டனர்.
இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எம்எல்ஏ பழனியாண்டி, அவரது மகன் இமயவரம்பன் மற்றும் பலர் செய்தியாளரையும், ஒளிப்பதிவாளரையும் விரட்டிச் சென்று அடித்து காயப்படுத்தியகக் கூறப்பட்டது. செய்தியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளான காணொளி வெளியாகிய நிலையில், திமுக எம்.எல்.ஏ-க்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். தொடர்ந்து, தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர் கதிரவன் அளித்த புகாரின் பேரில், குளித்தலை காவல் நிலையத்தில் எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் அவரது மகன் இமயவரம்பன் உள்ளிட்ட 21 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல, எம்எல்ஏ மகன் அளித்த புகாரின் பேரில் செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபஸ்டீன் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
திமுக எம்.எல்.ஏ பழணியாண்டியை கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், எம்எல்ஏ பழனியாண்டி, அவரது மகன் இமயவரம்பன் உள்ளிட்டோர் இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1 ல் சரண்டராகினர். அப்போது, உடனடியாக எம்.எல்.ஏ தரப்பில் இருந்து ஜாமீன் கேட்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இதுகுறித்து விசாரித்த கரூர் குற்றவியல் நீதிமன்றம் எம்எல்ஏ பழனியாண்டிக்கும், அவரது மகன் உள்ளிட்டோருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

