கரூர் | சாலையோரம் சடலமாக கிடந்த 10-க்கும் மேற்பட்ட நாய்கள் - பின்னணியில் அதிர்ச்சி தகவல்!
செய்தியாளர்: வி.பி.கண்ணன்
கரூர் அருகே கரைப்பாளையம் என்ற இடத்தில், கரூர் -மதுரை தேசிய நெடுஞசாலையோரம் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சடலமாக கிடந்துள்ளன. இதைக் கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த இடத்தில் அடிக்கடி இரவு வேளைகளில் லாரியில் வரும் மர்ம நபர்கள், உயிரிழந்த நாய்களை வீசி விட்டுச் செல்வதாக சிலர் தெரிவித்தனர். ஆனால், இந்த நாய்கள் மயக்கமடையச் செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நகர்ப்புறம், ஊரகப் பகுதிகளில் மற்றும் நாய்த் தொல்லை அதிகம் இருக்கும் இடங்களில் உள்ள நாய்களை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை எழுப்புவது வழக்கம். அதுபோல பிடிக்கப்படும் நாய்களை கொன்று இங்கு கொண்டு வந்து வீசிச் சென்றிருக்கலாம் என்றும் சிலர் தெரிவித்தனர். பொதுவாக நாய்களை பிடிக்கும்போது அவற்றுக்கு கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்பது விதி.
இதற்கு மாறாக பிடிக்கப்படும் நாய்களை கொன்று அவற்றை சாலையோர வீசிச் செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.