சேலம்: போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு தப்பியோடிய நபர் - 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
செய்தியாளர்: தங்கராஜூ
சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக கார், லாரிகளில் புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை சிலர் கடத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், ஓமலூருக்கு ஒரு காரில் 300 கிலோ புகையிலை போதை வஸ்துகள் கடத்தி வருவதாக மாவட்டம் காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சிறப்பு பிரிவு போலீசார், ஓமலூர் காமலாபுரம் பகுதியில் சோதனையில் ஈடுட்டனர். அப்போது வேகமாக வந்த ஒரு கார், போலீசாரை பார்த்ததும் சற்று முன்னதாகவே நிறுத்தப்பட்ட நிலையில், டிரைவர் இறங்கி ஓடிவிட்டார். இதைத் தொடர்ந்து காரை சோதனை செய்தபோது அதில், 33 மூட்டைகளில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 300 கிலோ புகையிலை போதைப் பொருட்கள் அதில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சிறப்பு போலீசார், ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த ஓமலூர் காவல் நிலைய போலீசார், தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.