காஞ்சிபுரம் | கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்து - கல்லூரி மாணவர் உயிரிழந்த சோகம்
செய்தியாளர்: கோகுல்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் சேத்துப்பட்டு பகுதியில் சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர் சமூக நலப்பணி மேற்கொள்ள இன்று காலை வந்துள்ளனர். இதையடுத்து மாணவர்கள் ஊராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சக மாணவர்களுக்கு குளிர்பானம் வாங்கி வர கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மனுபாரத் (24), பல்லாவரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (24) ஆகிய இரு மாணவர்களும் பைக்கில் தாம்பரம் சாலையில் சென்றுள்ளனர்.
அப்போது காவல் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முற்பட்ட போது எதிர் திசையில் வந்த கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கிய மனு பாரத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த பாலமுருகனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.