‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ - பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
''இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே'’ என்று பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ் (வயது 83) மாரடைப்பால் நேற்றிரவு காலமானார். கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் 'உன்னை காணாத நான்' என்ற பாடலில் கதக் நடனம் இடம்பெற்றிருக்கும். அந்தப் பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்தவர் பண்டிட் பிர்ஜு மகாராஜ்தான். இந்நிலையில் பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ''ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார். ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும், விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’' என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பிரபல கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் காலமானார்