"கமல்ஹாசன் எனும் நான்!” - தமிழில் உரத்து சொன்ன ’நாயகன்’..! பதவியேற்ற தமிழக எம்பிக்கள் விவரம்!
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த முகமது அப்துல்லா, சண்முகம், பி. வில்சன். அ.தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரசேகரன். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்தநிலையில், தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் பதவியேற்கின்றனர். அதன்படி, தி.மு.க சார்பில் பி.வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும், தி.மு.க கூட்டணி சார்பில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பதவியேற்கின்றனர். இவர்கள் கடந்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் எனும் நான்..
வெள்ளை சட்டை அணிந்துள்ள கமல்ஹாசன் மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் , மல்லிகார்ஜுன் கர்கே உள்ளிட்டோர் இருக்கை அருகே சென்று வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து, உறுப்பினர் பதவியேற்பு ஆவணங்களில் கமலஹாசன் கையெழுத்திட்டநிலையில், தமிழில் உறுதி மொழியை படித்து மநீம மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் .
இவரை தொடர்ந்து கவிஞர் சல்மா பதவி ஏற்கிறார். தனது இயற்பெயரான ராஜாத்தி என்பதை குறிப்பிட்டு தமிழில் உறுதி மொழியை படித்தார். இவர்களை தொடர்ந்து திமுகவின் சிவலிங்கம், தமிழில் உறுதி மொழியை படித்து பதவியேற்றார்.
திமுகவின் வில்சனும் தமிழில் உறுதிமொழியை படித்து பதவியேற்றார். பிரபல வழக்கறிஞரான வில்சன் இரண்டாவது முறையாக பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை வில்சனின் முதல் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவருடைய இரண்டாவது பதவிக்காலம் தொடங்குகிறது.
கடந்த 2019 ஜூலை 5 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட தமிழக எம்பிக்களான வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பாகவும், ம.தி.மு.க வைகோ, அ.தி.மு.க-விலிருந்து சந்திரசேகர், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக்காலம், ஜூலை மாதத்தில் முடிவடையும்நிலையில், மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான, வேட்பு மனுதாக்கல் ஜூன் 02 ஆம் தேதி தொடங்கி ஜூன் 9 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் வேட்புமனுவை திரும்பபெற ஜூன் 12ஆம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், 3 இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்கள், மீதமுள்ள ஒரு இடம் ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சி மாநிலங்களவை வேட்பாளராக தலைவர் கமல்ஹாசனும், தி.மு.க. வேட்பாளர்களாக, பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தற்போது அனைவரும் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ளனர்.