கள்ளக்குறிச்சி: அதிவேகமாக சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் - பைக் ரேஸில் இரு சிறுவர்கள் பலி
செய்தியாளர்: பாலாஜி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் இருந்து ஆவியூர் வரை மூன்று விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வாகன பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் இருந்து நான்கு முனை சந்திப்பு வழியாக சைலோம் சென்று அங்கிருந்து ஆவியூர், வடக்கு நெமிலி, ஆவி. கொளப்பாக்கம் கூட்ரோடு வழியாக மீண்டும் 5 முனை சந்திப்பை வந்தடையும் வகையில் வாகன பந்தயத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த வாகன ரேசின் போது, மோகன்ராஜ் மற்றும் ஹரிஷ் ஆகிய இரண்டு சிறுவர்கள் அதிவேகமாக சென்றதால் நிலை தடுமாறு கீழே விழுந்துள்ளது. இதில், வாகனத்தில் பயணம் செய்த மோகன்ராஜ் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த, திருக்கோவிலூர் போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, திருக்கோவிலூர் புறவழிச்சாலை பகுதிகளில் இது போன்ற இருசக்கர வாகன பந்தயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.