கள்ளக்குறிச்சி | மன அழுத்தத்தால் மருத்துவமனைக்கு சென்ற நபர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு
செய்தியாளர்: பாலாஜி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி.கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (44). இவருக்கு குடும்பத்தில் ஏற்கனவே பிரச்னை இருந்துள்ளது. அடிக்கடி மது குடித்துவிட்டு குடும்பத்தில் பிரச்னை செய்து வந்த இவர், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
இதையடுத்து அங்கு சிகிச்சை முடித்துவிட்டு குடும்பத்தில் உள்ள பிரச்னையை நினைத்து அளவுக்கு அதிகமாக மது குடித்ததாகவும் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள விவசாய கிணற்றில் குதித்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த பகுதிக்குச் சென்ற சிலர் கிணற்றில் ஒருவர் சடலமாக கிடைப்பதாக கள்ளக்குறிச்சி போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் உடனடியாக அங்கு சென்ற கள்ளக்குறிச்சி போலீசார், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் இதைத் தொடர்ந்து உடலை கைப்பற்றி இவரது இறப்பிற்கான காரணம் என்ன இவர் எப்படி இறந்தார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.