”கணவருக்கு ஆபத்து” | பெற்றோர் எதிர்ப்பு – பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்!
செய்தியாளர்: பாலாஜி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அதையூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் பெங்களூரில் உள்ள கோரமங்களா பகுதியில் உள்ள டிவிஎஸ் ஷோரூமில் மேலாளராக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில், தியாகதுருகம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கீதா என்பவர் பெங்களூரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்த காதல் விவகாரம் கீதாவின் வீட்டிற்கு தெரியவந்த நிலையில், முருகன் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு அவர்களது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து வீட்டிலிருந்து வெளியேறிய இருவரும், கிருஷ்ணகிரி அருகே உள்ள போச்சம்பள்ளி பகுதியில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடித்ததால் தனது கணவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து இருப்பதாகவும், தனக்கும், தனது கணவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.