”ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழையா?”.. கடம்பூர் ராஜூ பேச்சுக்கு வெடித்து கிளம்பிய எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், இதற்காக கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக, பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பேசினார்.
அதில், “பிரதமர் நரேந்திர மோடி எடுத்த ஆப்ரேஷன் சிந்தூர் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது இந்தியாவை வல்லரசாக உருவாக்கிய ஆற்றல்மிகு பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா இருவரும் நெற்றிக்கண்ணை திறந்து திமுக ஆட்சியை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
நாங்க தவறு செய்து விட்டோம். அதாவது, 1998 ல் ஜெயலலிதா இருக்கும் போது பாஜகவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்து விட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த ஒரு சாமி சுப்பிரமணி சாமி பேச்சைக் கேட்டு ஒரு ஓட்டில் பாஜக வீழ்த்தி வரலாற்றுப் பிழையாகி விட்டது. திமுகவுக்கு அதிகாரம் கொடுத்தது பாஜக தான், இன்றைக்கு பாஜகவை தீண்ட தகாத கட்சியாக திமுக பார்க்கிறது” என்று பேசியிருந்தார்.
1998 ல் ஜெயலலிதா இருக்கும் போது பாஜகவுடன் கூட்டணி வைக்காதது வரலாற்றுப் பிழை என கடம்பூர் ராஜூ கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடம்பூர் ராஜுவின் கருத்து குறித்து பலரும் தங்கள் கருத்துகளை புதிய தலைமுறைக்கு அளித்துள்ளனர். அக்கருத்துக்களை குறித்து காண்போம்.
மூத்த பத்திரிக்கையாளார் தராசு ஷ்யாம்,
“ 2004 ல் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி அமைந்து 40 க்கு 40 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது. பின்பு ஜெயலலிதாவே பாஜகாவுடன் கூட்டணி வைத்தது வரலாற்று பிழை என்றும் இனி பாஜக வுடன் கூட்டணி வைப்பதில்லை என தீர்மானமும் இயற்றினார். 2014 காலக்கட்டத்தில் பிரமர் மோடியே போயஸ் கார்டன் வந்து கூட்டணிக்கு அழைத்த போதும் அதனை மறுத்தார் ஜெயலலிதா. இன்றைய கூட்டணியை நியாயப்படுத்துவதற்காக வரலாற்றை வசதியாக மறைத்துக் கூறுகிறார் கடம்பூர் ராஜு” என்று கூறியுள்ளார்.
அரசியல் விமர்சகர் ரவீந்தரன் துரைசாமி கூறுகையில்,
”ஜெயலலிதா அன்று ஆட்சியை கலைக்கவில்லை என்றால் 1998 வெற்றி பாஜக வால் எனக்கூறி அதிமுக வில் பிளவை பாஜக ஏற்படுத்தியிருக்கும். தன் பலத்தை நிரூபிக்கவே அன்று ஜெயலலிதா பாஜக வின் ஆட்சியை கலைத்தார், ஜெயலலிதா இறக்கும் போது 40 சதவீதத்தில் விட்டுபோன அதிமுக இன்று பாதியளவிலான ஓட்டு சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது. எனவே 13 சதவீதம் கொண்ட பாஜக முக்கியமானதாக தெரிகிறது. அதிமுக-வை விட பெரிய கூட்டணியை பாஜக அமைத்து விடும் என்பதால் இவ்வாறு பேசுகிறார் கடம்பூர் ராஜூ. இது பாஜாக வின் முக்கியதாதுவத்தையே காட்டுகிறது” என்றார்.
வைகைச்செல்வன் (அதிமுக) கூறுகையில்,
அன்றைய சூழ்நிலையில் எடுக்கபட்ட முடிவு அது, மறைந்த தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்வது தவறான போக்குகளுக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கடம்பூர் ராஜூவின் மறுப்பு..,
”1998 ல் ஜெயலலிதா அவர்கள் யாரும் கூட்டணி வைக்க தயங்கிய பாஜக வோடு கூட்டணி வைத்து 30 தொகுதிகளை வென்று முதன்முறையாக பாஜகவை ஆட்சியில் அமர்த்தியவர். நாங்கள் கூட்டணியில் இருந்து விலகிய போது திமுக பாஜக உடன் கூட்டணி வைத்தது. தற்போது நாங்கள் கூட்டணி வைத்தால் தவறு அதே திமுக கூட்டணி வைத்தால் தவறா என்பதை உணர்த்தவே அவ்வாறு பேசினேன்.
மற்றபடி ஜெயலலிதாவை நான் விமர்சனம் செய்யவில்லை. அவர் எங்களுக்கு வழிபடக்கூடிய தெய்வம். கனவிலே கூட அம்மா அவர்களை பற்றி அவ்வாறு பேசமாட்டோம். நான் கூறிய கருத்து திரித்துக்கூறப்பட்டுள்ளது” ” என்று விளக்கம் கொடுத்தார்.
எப்படி இருந்தாலும் பாஜக உடனான கூட்டணி அமைத்துள்ள நிலையில் ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு மனநிலையில் இருப்பதுபோல் தோன்றும் ஒரு கருத்தை பேசி கடம்பூர் ராஜூ சிக்கியுள்ளார்.