சேலம் |ஆபத்தை உணராமல் காரில் அழைத்துச் செல்லப்பட்ட கபடி வீராங்கனைகள் - வைரல் வீடியோ
செய்தியாளர்: ஆர்.ரவி
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர பகுதியில் (மாருதி ஈகோ) வாகனத்தில் 15க்கும் மேற்பட்ட மாணவிகளை அழைத்து வந்துள்ளனர். அப்போது காரில் இடம் இல்லாததால் காரின் கதவு பக்கத்தில் இரண்டு மாணவிகள் தொங்கியவாறு பயணித்தனர். முல்லைவாடி பகுதியில் இருந்து ராணிப்பேட்டை பேருந்து நிலையம் வரை கார் சென்ற நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைத் தொடர்ந்து ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காரை ஓட்டி வந்தது சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் சரவணகுமார் என்பதும், ஆத்தூரில் நடைபெற்ற கபடி விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவிகள் வீடு திரும்பும் போது உற்சாக மிகுதியில் அவ்வாறு பயணம் செய்ததும் தெரியவந்தது. மேலும் காரில் இருக்கைகளை அகற்றிவிட்டு மாணவிகளை அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரனிடம் கேட்டபொழுது... ஒரே காரில் 15-க்கும் மேற்பட்ட மாணவிகளை அழைத்துச் சென்ற வீடியோ வைரலான நிலையில், கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கார் ஓட்டுநரிடம் ஓரிரு நாளில் விசாரணை நடத்த இருக்கிறோம். ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்வது குறித்து விசாரணையின் முடிவில் தெரியவரும் என்று தெரிவித்தார்.