“விநாயகர் சிலை ஊர்வலங்களால் மக்களுக்கு என்ன பயன்?” நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி

“விநாயகர் சிலை ஊர்வலங்களால் மக்களுக்கு என்ன பயன்?” என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
anandh venkatesh
anandh venkatesh pt web

விநாயகர் சிலை ஊர்வலங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல கடவுளே கேட்காத நிலையில் ஊர்வலத்தால் என்ன பயன் என்று ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 25 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அனுமதி வழங்க வேண்டி காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டுமென்றும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பிலும் காவல்துறை தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர், “தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிலைகள் வைப்பதற்கான இடங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு சிலை வைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் அந்தந்த பகுதியில் உள்ள சட்ட ஒழுங்கு நிலைப்பாடு பொறுத்து, சிலை வைக்க அனுமதி கோரிய மனுக்களை பரிசீலித்து முடிவெடுக்க உள்ளூர் காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழக அரசின் அரசாணைக்கு முரணாக விநாயகர் சிலைவைக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தால் அந்த மனுக்கள் ஏற்கப்படாது எனக் கூறி மனுவை முடித்து வைத்துள்ளார்.

அதேசமயத்தில், “சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி எந்த சாமிகளும் கேட்காத நிலையில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வதால் என்ன பயன்? இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்னப் பயன்? விநாயகர் சிலைகளை வைத்து ஊர்வலமாக சென்று அரசியல் செய்யப்படுகிறது. இந்த வழக்கில் நான் பதிவு செய்த கருத்துகள் எனது சொந்த கருத்துகள் என்பதை மட்டும் பதிவு செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பொறுத்தவரை, ஈரோடு மாவட்டத்தில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டத்தில் 13 இடங்களிலும், கோவை மாவட்டத்தில் 16 இடங்களிலும் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கேட்டுள்ளார்கள். அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபாடு நடத்துவதற்கும் அனுமதி கேட்டுள்ளார்கள்.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்திபுதிய தலைமுறை

சில இடங்களில் காவல்துறை வழக்குகளை பரிசீலித்து முடிவெடுக்காமலும் சில இடங்களில் மனுக்களை நிராகரித்தது தொடர்பாகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதேநேரம் தமிழக அரசும் விநாயகர் சிலைகளை வைப்பது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com