“இப்படி நிரூபிக்கப்பட்டால் செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்படுவார்” - தராசு ஷ்யாம் சொல்வதென்ன?
செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கடுமையான வாதங்களை வைத்தார்.
அதனைத்தொடர்ந்து அமலாக்கப்பிரிவு தரப்பில், “அமலாக்கப் பிரிவு பதில் வாதத்துக்காக, விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்” என அத்தரப்பில் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார். அதை ஏற்று விசாரணையை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்த நிலையில், ”ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில், இப்படி நிரூபிக்கப்பட்டால் செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்படுவார்” என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதிய தலைமுறையில் பேசுகையில், “விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நபர்கள், காணவில்லை என்றால் அவர்களைக் கண்டுபிடித்து தருவதற்காகப் போடப்படும் மனுவே, ஆட்கொணர்வு மனு. ஆனால், செந்தில் பாலாஜியைப் பொறுத்தவரை, சட்டவிரோத கைது என்கிற அடிப்படையில் மனு போடப்பட்டுள்ளது. ஆகவே, இது சரிதான்.
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது. இந்த வழக்கில் வெற்றி பெறுவதற்கு, சம்பவத்தை (சட்டவிரோத கைது என்பதை) செந்தில் பாலாஜி தரப்பு நிரூபிக்க வேண்டும். நிரூபித்தாலே விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளது” என்கிறார்.
செந்தில் பாலாஜி விடுதலை குறித்து தராசு ஷ்யாம் பேசிய மேலும் சில கருத்துகளைக் கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்:

