செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு: என்.ஆர்.இளங்கோ முன்வைத்த வாதம் என்ன?
செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா காணொளி காட்சி மூலம் ஆஜரானார். அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார்.
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவலாக கருதக் கூடாது என அமலாக்கத் துறை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை தொடங்கியவுடன் அமலாக்கப் பிரிவு துஷார் மேத்தா, ”வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கப் பிரிவு தரப்பில்தான் முதலில் வாதம் முன்வைக்கப்பட வேண்டும்” என கோரிக்கை வைக்க, அதற்கு என்.ஆர்.இளங்கோ தரப்பு, ”அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதால் மனு விசாரணைக்கு உகந்தது என எங்கள் தரப்பில்தான் முதலில் வாதம் முன்வைக்கப்பட வேண்டும்” எனக்கோரினார். தொடர்ந்து என்.ஆர்.இளங்கோ, வாதத்தை வைத்து தொடர்ந்தார்.
“ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவையும், அமர்வு நீதிமன்ற உத்தரவையும் எதிர்த்து அமலாக்கப் பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது” என தெரிவித்த அவர், உச்ச நீதிமன்றம் இதுகுறித்து வழங்கிய தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டினார். ”செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்தபின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது” என்றார்.
மேலும் அவர், “உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான். செல்லுபடியாகக் கூடிய ரிமாண்ட் உத்தரவு இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அதற்கு காரணம் மாற்று நிவாரணமாக ஜாமீன் கோர முடியும்” என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், “வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம்” எனப் பதில் அளித்தனர். அதன்பின் தொடர்ந்து பல உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, ”சட்டப்படி இந்த கைது நடைபெறவில்லை” என்ற வாதத்தை என்.ஆர்.இளங்கோ முன்வைத்தார். மேலும் அவர், “2015ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு திமுக ஆட்சி அமைந்தபின் மட்டுமே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
5 முறை நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், 4 முறை செந்தில் பாலாஜி தரப்பில் அவரது ஆடிட்டரும் ஒருமுறை செந்தில் பாலாஜியும் ஆஜர் ஆகியுள்ளனர். முழுமையாக விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் 14 அதிகாலை செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருதி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது அமலாக்கப் பிரிவுதான். அவருக்குப் போலியான அறுவைச்சிகிச்சை என எப்படிக் கூற முடியும்? நேற்று 4 அடைப்புகள் அறுவைச்சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு காவல் துறையினரின் அதிகாரம் வழங்கப்படவில்லை. அதனால் அமலாக்கப் பிரிவு எப்படி காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர முடியும்? சுங்கத்துறை, ஜி.எஸ்.டி. வரித்துறை அதிகாரிகளுக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அமலாக்கப் பிரிவுக்கு காவலில் வைத்து விசாரிக்க சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் அதிகாரம் வழங்கவில்லை.
விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு 24 மணி நேர அவகாசம் மட்டுமே உள்ளது. அதை அமலாக்கப் பிரிவு பயன்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட முதல் 15 நாட்களுக்குப் பிறகு காவலில் வைத்து விசாரிக்க எந்தக் காரணத்துக்கும்.. அது சுனாமியாக இருந்தாலும் சரி, கொரோனாவாக இருந்தாலும் அனுமதிக்க முடியாது” என்றார்.
தொடர்ந்து அவர், “கைதின்போது சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை. முதன்மை அமர்வு நீதிமன்றம், நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிடும்போது மனதைச் செலுத்தவில்லை. இயந்திரத்தனமாக நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டுள்ளதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிகோர அதிகாரமில்லை. சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலத்துடன் சேர்க்கக்கூடாது” எனக் கூறி தன்னுடைய வாதத்தை நிறைவு செய்தார்.
தொடர்ந்து “அமலாக்கப் பிரிவு பதில் வாதத்துக்காக தள்ளிவைக்க வேண்டும்” என துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார். அதை ஏற்று விசாரணையை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

