மக்கள் இயக்கம் to பிரசாந்த் கிஷோர் சந்திப்பு திட்டம் வரை... விஜய்யின் அடுத்த அரசியல் மூவ் என்ன?

நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து பிரசாந்த் கிஷோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய், பிரசாந்த் கிஷோர்
விஜய், பிரசாந்த் கிஷோர்pt web

"தமிழில் முன்னனி நடிகராக வலம் வரும் விஜய் தனது அரசியல் விருப்பத்தை என்றுமே மறைத்ததில்லை" என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அதற்கேற்றார்போல விஜய்யின் அடுத்தடுத்த நடவடிக்கைகளும் அமைந்து வருகின்றன.

தனது திரைப்படம் வெளியாகும் போது கொடி கட்டி, போஸ்டர் ஒட்டி கொண்டாடும் ரசிகர் கூட்டத்தை, 2009ஆம் ஆண்டு மக்களுக்கு சேவை செய்யும் இயக்கமாக மாற்றினார் விஜய். அப்படித்தான் அவரின் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமானது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் செயல்பாடுகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் இப்போது பரபரப்படைந்திருக்கிறது.

தனது திரைப்படங்கள் ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கும்போது, அந்த சர்ச்சையை சுமூகமாக முடித்துவைத்து படத்தை எப்பாடுபட்டாவது வெளியிட வேண்டுமென தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் விஜய் மேற்கொள்வார். அதேநேரம் மறுபுறம் சமூக பிரச்சனைகளுக்கு தனது நடவடிக்கைகள் மூலம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிடுவார்.

Vijay
Vijay

உதாரணமாக, நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதுமட்டுமின்றி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் சந்தித்தார். இப்படி தன் அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தார் விஜய். அந்த வரிசையில், தன் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில், குட்டிக் கதைகள் மூலம் தனது பெரும் அரசியலை அழகாக பேசுவதை, விஜய் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால், விஜய்யின் ஒவ்வொரு செயல்பாடுகளும் உற்று நோக்கப்படுகின்றன.

2021 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சைக்கிளில் சென்று விஜய் வாக்கு செலுத்தியது அன்றைய தினம் முழுவதும் பேசு பொருளானது. தனது அரசியல் எதை நோக்கியது என்பதை இன்னும் விஜய் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத நிலையிலும் கூட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தன் ரசிகர்களை (இயக்க நிர்வாகிகளை) அவர் போட்டியிட வைத்ததும், இயக்கக் கொடிகளை பயன்படுத்த அனுமதித்ததும் அவரது அரசியல் நடவடிக்கைகளின் நீட்சியாகவே பார்க்கப்பட்டன. இந்நடவடிக்கைகள் அரசியல் தலைவர்களுக்கு (அம்பேத்கர், காமராஜர்) தனது இயக்கத்தை மாலை அணிவிக்க உத்தரவிட்டது வரை நீண்டு கொண்டேதான் உள்ளது.

vijay
vijay

இந்நடவடிக்கைகளில் விஜய் மாணவர்களை சந்தித்து கல்வி விருதுகளை வழங்கி இருந்தது அதன் உச்சமாக பார்க்கப்படுகிறது. விஜய் அந்நிகழ்வில் வாக்குக்கு பணம் தருவது தொடர்பாகவும் பேசி இருந்தார். விலையில்லா மருந்தகம், குருதியகம், விழியகம், பள்ளி மாணவர்கள் கல்விக்கு உதவும் வகையில் பயிலகம் என பல்வேறு வகைகளிலும் மக்களுக்கு நெருக்கமான செயல்பாடுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தனது ரசிகர்களை வைத்து மட்டுமே தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்பதை விஜய் நிச்சயம் அறிந்திருப்பார். விஜய் மக்கள் இயக்கத்தினை கிராமியப் பகுதிகளில் வலுப்படுத்துவதன் மூலமே குறிப்பிடத்தக்க தாக்கத்தை தேர்தல்களில் ஏற்படுத்த முடியும் என்பதும் விஜய்க்கு தெரிந்திருக்கும். எனவே 234 தொகுதிகளிலும் தனது இயக்கத்தை வலுப்படுத்தும் வேலைகளில் விஜய் தீவிரமாக இயங்கி வருகிறார்.

விஜய்
விஜய்புதிய தலைமுறை

இந்நிலையில், விஜய் தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது தொழில்முறை தேர்தல் ஆலோசகராக பாஜகவிற்கு பணியாற்றினார் பிரபல தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர். தொடர்ந்து நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, பஞ்சாபில் அம்ரீந்தர் சிங், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பல தலைவர்களுக்கும் தொழில்முறை தேர்தல் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

இப்படி இருக்கையில், 2021 மே 2 ஆம் தேதி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பிரசாந்த் கிஷோர் தான் இனி தொழில்முறை ஆலோசகராக இருக்கப்போவதில்லை என்றார். அவர் அரசியலில் களமிறங்கப்போவதாக யூகங்கள் வெளியாகின. அண்மையில் கூட தான் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜய், பிரசாந்த் கிஷோரை சந்திக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பேசுபொருளாகியுள்ளது. இச்சந்திப்பு, விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை செய்யவா அல்லது பிரசாந்த் கிஷோர் இதற்கு முன் மற்ற கட்சிகளுக்கு ஆலோசகராக செயல்பட்டது போல் தனக்கும் செயல்பட வேண்டும் என்று கேட்பதற்காகவா என்பதெல்லாம் சந்திப்பு நிகழ்ந்த பின்பே தெரிய வரும்.

ஒருவேளை பிரசாந்த் கிஷோரை சந்தித்து அவருடன் பணியாற்றுவதை விஜய் உறுதி செய்யும் பட்சத்தில், மிகப்பெரிய திட்டத்துடன் 2026 சட்டமன்ற தேர்தலை விஜய் எதிர்கொள்ள தயார் ஆவார் என்றே பார்க்கப்படுகிறது.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியனிடம் நாம் கேட்டபோது, “விஜய் தனது மக்கள் நல இயக்கத்தை வைத்து பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். 234 தொகுதிகளிலும் அன்னதானம், மாணவர்கள் கல்வி பயில பயிலகம், மாணவர்களை அழைத்து பாராட்டுவது, அவர்களிடம் பெரியார், அம்பேத்கர் போன்றோரை படிக்க சொல்வது போன்ற பல விஷயங்களை செய்து வருகிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் காந்தியை சந்தித்தது, 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடியை சந்தித்தது என ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு தலைவர்களை சந்தித்து வருகிறார். இசை வெளியீட்டு விழாக்களிலும் தனது படங்கள் ரிலீஸ் ஆகும் போதும் அவர் பேசும் கருத்துக்கள் பலவும் சர்ச்சையாகும். வெளியாகும் திரைப்படங்களுக்காக சர்ச்சையான கருத்துகளை பேசி விளம்பரம் செய்கிறாரா அல்லது திரைப்படங்கள் ஓடுவதற்காக சொல்கிறாரா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகவே உள்ளது.

அவர் தமிழ்நாடு அரசியலில் எந்த இடத்தில் தன்னை பொருத்திக் கொள்ளப் போகிறார் என தெரியவில்லை. இங்கு எந்த சித்தாந்தத்தை, எந்த கொள்கைகளை, யாரை எதிர்த்து நீங்கள் அரசியல் செய்கிறீர்கள் என்பது தான் முக்கியம். ஆக நீங்கள் எதிர்ப்பவர்களை விட என்ன நல்லது செய்யப்போகிறீர்கள் என்பது இங்கு முக்கியமானதாக இருக்கிறது.

தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரை விஜய் சந்தித்தால், அவர்மூலம் கடந்த தேர்தலில் மக்கள் எதனடிப்படையில் வாக்கு செலுத்தினார்கள், இந்த தேர்தலில் நீங்கள் என்ன மாதிரியான பிரசாரம் செய்தால் வெற்றி பெறலாம், என்ன மாதிரியான வாக்குறுதிகளை தரலாம் என்பன போன்ற வியூகங்களை விஜய் தெரிந்துகொள்ளக்கூடும். ஆனால் தமிழ்நாடு அரசியலில் விஜய் தன்னை எந்த இடத்தில் பொருத்திக் கொள்ளப்போகிறார், இங்கிருக்கும் அரசியல் கட்சிகளை எவ்வாறு சமாளிப்பார், அவர்களிடம் இருந்து தனித்து தன்னை எப்படி சிறப்பாக காட்டிக் கொள்கிறார் என்பதில் தான் அவரது வெற்றி அடங்கியுள்ளது. அந்த விஷயங்களில் தெளிவு படுத்தாமல் பிரசாந்த் கிஷோரை மற்றும் பார்த்தார் என்றால் பிரசாந்த் கிஷோர் வகுக்கும் யுக்திகளும் வெற்றி பெறாமல் போக வாய்ப்புள்ளது.

vijay
vijay

மத்தியில் இருக்கிறவர்களை எதிர்த்த அரசியலா மாநிலத்தில் உள்ளவர்களை எதிர்த்து அரசியலா, 2024 இலக்கா 2026 இலக்கா... இதை எல்லாம் விஜய் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். ஆகவே விஜய்க்கு நான் சொல்ல நினைப்பது, முதலில் அரசியல் கட்சியை ஆரம்பித்து மக்களை சந்தித்த பின் பிரசாந்த் கிஷோரை பாருங்கள்”

பெரியார் பிறந்த நாளில் கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியானதே? அதைப்பற்றிய உங்கள் பார்வை...?

அப்படியானால் திராவிட அரசியலை நோக்கி செல்லப்போகிறாரா? எனில் ‘நீங்கள் வலதுசாரியா? இடதுசாரியா? மய்யமா? கமல்ஹாசன் மய்யம் என சொல்லிவிட்டார். மத்தியில் மாநிலத்தில் எந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைக்கிறீர்கள்? எந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என நினைக்கிறீர்கள்? மணிப்பூர் விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன? உங்கள் மனதில் இருக்கும் கருத்துகள் நீங்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயமே தவிர பிரசாந்த் கிஷோர் தீர்மானிக்க வேண்டிய விஷயம் அல்ல’ என்று சொல்ல நினைக்கிறேன்” என்றார் பத்திரிகையாளர் பிரியன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com