“விஜய் குறித்து பிரேமலதா பேசியது அதிகப்படியானது” - மூத்த பத்திரிகையாளர் பிரியன் கருத்து!

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பிரேமலதா விஜயகாந்த் சொன்ன கருத்து குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன், “பிரேமலதா சொல்வது அதிகபட்சமானது” என தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 77 மாவட்ட செயலாளர்களில், 70-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தின் இடையே பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அரசியல் வேறு, சினிமா வேறு; நடிகர் விஜய் மாணவர்களுக்கு உதவியது பாராட்டுக்குரியது. அவர் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து அவர்தான் கூற வேண்டும். 40 ஆண்டு காலம் தன் வாழ்க்கையை பலருக்கும் முன்னுதாராணமாக வாழ்ந்தவர் விஜயகாந்த். இனி யார் நினைத்தாலும் அவரைப்போல யாராலும் வர முடியாது. எதையும் எதிர்பார்க்காமல் அனைவருக்கும் உதவியவர் விஜயகாந்த். அவரைப்போல மற்றவர்களும் வர நினைத்தால் மோசமான விளைவைத்தான் அது ஏற்படுத்தும்” என தெரிவித்திருந்தார்.

பிரேமலதா-விஜய்
பிரேமலதா-விஜய்Pt Desk

பிரேமலதா விஜயகாந்தின் இந்த கருத்து அரசியல் ரீதியாக விவாதமான நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் பிரியனை இது குறித்து தொடர்பு கொண்டோம். அப்போது அவர் பேசுகையில், “விஜயகாந்த் 2006 ஆம் ஆண்டு முதல் 10% வாக்குகள் வரை வாங்கினார். ‘நான் யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன். மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி’ என்றார். அவரே 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணியில் இணைய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

அதன் பின் மக்கள் நலக்கூட்டணி, பாஜக உடன் கூட்டணி என எல்லாம் அமைத்தார். அதன் பின் அவரது உடல்நலன் சரியில்லாமல் ஆனது. தேமுதிகவும் பெரும் சரிவை சந்தித்த நிலையில் தான் உள்ளது. விஜயகாந்திற்கு உடல் நலன் நன்றாக இருந்திருந்தால் அவர் எப்படிப்பட்ட அரசியலை கையாண்டிருப்பார் என யூகிக்க முடியாத வகையில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த போதே அவர் சரிவை சந்திக்க ஆரம்பித்துவிட்டார் என்பது என் கருத்து.

திமுக அதிமுக எதிர் என விஜயகாந்த் சொன்னதைப் போல் எதையும் விஜய் சொல்லவில்லை. அவரது அரசியல் நோக்கம் என்ன என்பதும் தெரியவில்லை. விஜய் என்ன அரசியலை செய்ய போகிறார் என்பது தெரியாமல் மோசமான விளைவுகளை சந்திப்பார் என பிரேமலதா சொல்வது அதிகபட்சமான ஒரு விஷயம்.

ஒன்று மட்டும் நிச்சயம். ரஜினிகாந்த் போன்ற செல்வாக்கு மிக்க நடிகர்களே அரசியல் நமக்கு ஒத்து வராது என புரிந்து உடல்நிலையை காரணம் காட்டி விலகிவிட்டனர். எனில் விஜய் தேர்தல் அரசியலுக்கு வந்தால் அவருக்கு முதல் எடுத்ததும் கிடைக்கும் வாய்ப்புகள் மிக மிக குறைவு. எடுத்ததும் 12% வாக்குகள் கிடைக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. விஜய்யின் நற்செயல்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கது. அரசியல் ரீதியாக அவரது செயல்திட்டங்கள் தெரியாமல் கருத்து சொல்வது சரியல்ல” என்றார்.

முழு செய்தியையும் அறிய, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள காணொளியை பார்க்கவும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com