சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
ஜெயலலிதா நினைவிடம் திறந்ததை பார்க்கும்போது சசிகலா விடுதலையை கொண்டாடுவது போல்தான் தோன்றுவதாக அமமுகவின் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
4 ஆண்டுகால சிறை தண்டனைக்கு பிறகு சசிகலா இன்று விடுதலையானார். கொரோனா தொற்று காரணமாக சசிகலா பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அங்கிருந்தவாறேதான் இன்று விடுதலையானார். அவரை பார்க்க ஏராளமான அமமுக தொண்டர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் விக்டோரிய மருத்துவமனையின் முன்பு குவிந்திருந்தனர்.
அந்த வகையில் சசிகலாவின் உறவினர் டிடிவி தினகரனும் சசிகலாவை பார்க்க விக்டோரியா மருத்துவமனைக்கு வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் அமமுக - அதிமுக இணையுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். அரசியல் பற்றி பேச விரும்பவில்லை எனக் குறிப்பிட்டார்.
மேலும், “ஜெயலலிதா நினைவிடம் திறந்ததை பார்க்கும்போது சசிகலா விடுதலையை கொண்டாடுவது போல்தான் தோன்றுகிறது. மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சசிகலாவை அழைத்துச் செல்வோம். அதிமுகவை மீட்டு உண்மையான ஜெயலலிதாவின் ஆட்சியை கொடுக்க முயற்சி செய்கிறோம்” என்றார்.