முதல்முறையாக அமைச்சரவையில் இடம்பெறும் முஸ்லிம் லீக்.. நாளை அமைச்சராகும் ஷாஜகான்!
தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சியில், பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயூஎம்எல் ஆதரவு முக்கிய பங்கு வகிக்கிறது. மே 10 அன்று விஜய் முதல்வராக பதவியேற்று 9 அமைச்சர்களுடன் ஆட்சி தொடங்கிய நிலையில், மே 21 அன்று 23 பேர் கொண்ட அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் IUML-க்கு முதல்முறையாக அமைச்சரவை இடம் கிடைக்கிறது.
தமிழக சட்டபேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானபோதும் ஆட்சிமையக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு இலாகாவும் ஒதுக்கப்பட்டது.
எனினும், மேற்கொண்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமலேயே இருந்துவந்த நிலையில், 21ஆம் தேதியான இன்று தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்தசூழலில் இன்னும் 2 அமைச்சருக்கான துறைகள் ஒதுக்கப்படாத நிலையில் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் தான் முஸ்லிம் லீக் கட்சியிலிருந்து பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரான ஷாஜகான் அமைச்சராக பொறுப்பேற்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதியாகி்யிருக்கும் சூழலில், IUML தரப்பிலிருந்து அதற்கான கடிதமும் முதல்வரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்முறையாக தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிகாரம் பெறவிருக்கிறது.
