
சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் பார்த்துவந்த அமைச்சரவைகளை வேறு இரு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளித்த தமிழ்நாடு அரசு, செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. இதில் தமிழக அரசு தரப்பில், செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எவ்வித தடையும் இல்லை என்றும் எம்.எல்.ஏ.விற்கு வழங்கப்படும் ஊதியம் தான் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி தேதி குறிப்பிடாமல் இவ்வழக்கை தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் அமைச்சராக தொடர்வது தார்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அவர் அமைச்சராக தொடரமுடியுமா என்பது குறித்து நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்து மனுதாரர் தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றமே இதுபோன்ற கருத்தினை தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.