"சபாநாயகரை சந்திந்தது ஏன்?” - செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்
அத்திக்கடவு – அவினாசி திட்டத்தைக் கொண்டு வந்தற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது புகைப் படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி இந்த பாராட்டு விழாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களை சந்தித்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தொடர்ந்து தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், இன்று செங்கோட்யைன் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளான நிலையில், இன்று சட்டமன்றத்தில் தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், தங்களுடனான சந்திப்பை செங்கோட்டையன் தவிர்த்து வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்க பதிலளித்த அவர்... இந்தக் கேள்வியை செங்கோட்டையனிடம் தான் கேட்க வேண்டும் என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் தனியார் யூடியூப் சேனலின் ஆண்டு விழாவில் பங்கேற்க அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் வருகை தந்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்....
சபாநாயகரை சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது சாதாரணமானது. இன்று கூட ஏழு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்துள்ளார்கள். சுற்றுச்சூழல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக சபாநாயகரை சந்தித்தேன். சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக கடினம் கொடுத்துள்ளேன். சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் அங்கு வருகை தந்தார். அவரிடம் அந்த கடிதம் கொடுக்கப்பட்டது என்று கூறினார்.