பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: விரைவில் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: விரைவில் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: விரைவில் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணத்தை கண்டறியும் ஆய்வு அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான அனைத்து விவரங்களையும் விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் ஹெலிகாப்டர்களை இயக்குவதில் நிபுணர். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பலவகை ஹெலிகாப்டர்களை இயக்கிய அனுபவம் கொண்ட விமானியான இவர், ஹெலிகாப்டர்கள் அனைத்து நுணுக்கங்களையும் நன்கறிந்தவர். இவர் தலைமையில் முப்படைகளின் கூட்டு விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையில் ஹெலிகாப்டரின் பாதையில் மேகக்கூட்டங்கள் வந்ததால், தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னர் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மேகக் கூட்டங்களில் நுழைந்த பிறகு பாதை தவறி , விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் நிபுணர் குழு வரைவு அறிக்கையில் விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் குழு ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்குமா, அல்லது ஹெலிகாப்டர் மேகமூட்டம் சூழ்ந்ததால் வழிதவறியதா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி உள்ளது. முப்படைகள் தொடர்பான விபத்து என்பதால் பல நுணுக்கமான விவரங்கள் முப்படைகள் மற்றும் அரசுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஒருவர் கூட பிழைக்கவில்லை என்பதால், கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்த துல்லியமான விவரங்கள் கிடைக்காததும் விசாரணைக்கு சவாலாக இருந்தது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியில் உள்ள விவரங்கள், ஏர் டிராபிக் கண்ட்ரோல் அளிக்கும் தகவல்கள், சம்பவ இடத்தில் கிடைத்துள்ள தடயங்கள், மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் விவரங்களின் அடிப்படையில் விசாரணை அமையும் என வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com