\
Is Minister Anand Dissatisfied?
Is Minister Anand Dissatisfied? TVK

அதிருப்தியில் அமைச்சர் ஆனந்த் ? அதிமுக புள்ளியால் வந்த சிக்கல்!

அதிமுக முக்கிய நபர் தவெகவில் சேர்ந்ததும் அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Published on
Summary

முதல்வர் விஜயை அதிமுகவில் இருந்தபோது கடுமையாக விமர்சித்த சிங்கை ராமசந்திரனுக்கு, தவெகவில் சேர்ந்தவுடன் முக்கிய அரசுப் பதவி வழங்கப்பட்டிருப்பது, நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் ஐஐடியில் பட்டம் பெற்ற சிங்கை ராமசந்திரனை கடந்த 2016-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவின் ஐ.டி பிரிவின் மாநிலச் செயலாளராக நியமித்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக மாறிய சிங்கை ராமசந்திரன் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

இதனிடையே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த சூழலில் கடந்த ஜூலை மாதம் அதிமுகவில் இருந்து விலகுவதாக சிங்கை ராமசந்திரன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Singai Ramachandran
Singai RamachandranADMK X

கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே அவரை தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்க தலைவராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே முக்கியத்துவம் வாய்ந்த அரசுப் பதவி சிங்கை ராமசந்திரனுக்கு வழங்கப்பட்டது தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

அதிமுகவில் சிங்கை ராமசந்திரன் இருந்தபோது முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசியது சமூக வலைதளங்களில் அதிகமாக கவனம் பெற்றது. அப்படிப்பட்டவருக்கு தவெகவில் சேர்ந்ததும் அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

TVK

கட்சியின் பொதுச்செயலாளரின் விருப்பமின்றி இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. நீண்ட காலமாக கட்சிக்கு உழைத்த பல பேருக்கு இதுவரை பதவிகள் கிடைக்காமல் இருக்கிறது. இந்நிலையில், அவர்களுக்கு பதவி அளிக்காமல், முதலமைச்சர் விஜயை கடுமையாக தாக்கிப் பேசிய, தவெகவிற்காக உழைக்காத மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு... அதுவும் சேர்ந்தவுடனேயே பெரிய அரசுப் பதவி அளித்திருப்பதால் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் கட்சி நிர்வாகிகளும் இதுகுறித்து பொதுச்செயலாளர் ஆனந்திடம் தொடர்ந்து முறையிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

பிற கட்சிகளை போல இல்லாமல், தவெகவில் விஜய் நற்பணி மன்றத்தில் இருந்தவர்களுக்கே முன்னுரிமை என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பல்வேறு மேடைகளிலும் கூறிவந்தார். ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அரசு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விஜய் நற்பணி மன்றத்தில் இருந்து கட்சிக்கு வந்தவர்கள் தங்கள் அதிருப்தியை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்திடம் வெளிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Is Minister Anand Dissatisfied?
நேபாள துயரத்தை போல கேரளாவிலும் : மழையே பெய்யாமல் வந்த வெள்ளம்... வெளிவந்த அதிர்ச்சி பின்னணி !
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com