”8 பெண்களின் தூக்கு தண்டனையை நிறுத்த வேண்டும்” - ஈரானுக்கு ட்ரம்ப் வேண்டுகோள்!
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அது நாளையுடன் முடிவுக்கு வருகிறது. தொடர்ந்து, போரை நிறுத்தும் பணியில் அமெரிக்கா - ஈரான் இடையே இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் தயாராகி வருகிறது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணித்துள்ளது. அமெரிக்கா வைக்கும் கோரிக்கைகளும், கெடுபிடிகளுமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தவிர, ஈரானுக்குச் சொந்தமான கப்பலைப் பிடித்து வைத்திருப்பதும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக் குறித்து ஈரான் எந்த வகையான முடிவுகளையும் வெளியிடாத நிலையில், பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராகி வருகிறது. தலைநகர் இஸ்லாமாபாத் முழுவதும் சுமார் 20,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் தான், ஈரானில் தூக்கிலிடப்பட உள்ள 8 பெண்களை விடுதலை செய்யுமாறு அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து தனது, ட்ரூத் சோசியல் வெளியிட்டுள்ள பதிவில், "எனது பிரதிநிதிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள ஈரானியத் தலைவர்களே, இந்தப் பெண்களை நீங்கள் விடுதலை செய்தால் நான் பெரிதும் பாராட்டுவேன். அவர்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்க வேண்டாம். இது நமது பேச்சுவார்த்தைக்கு ஒரு சிறந்த தொடக்கமாக அமையும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார். அமெரிக்க ஆதரவு ஆர்வலர் ஒருவரின் பதிவைப் பகிர்ந்துள்ள டிரம்ப், ஈரானில் 8 பெண்கள் தூக்கிலிடப்படத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் உயிரைக் காப்பது, இரு நாடுகளுக்கு இடையே நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு நல்லெண்ணத்தை உருவாக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
எனினும், ஈரான், ட்ரம்பின் வேண்டுகோளுக்கு உடனடியாகப் பதிலளிக்கவோ அல்லது ட்ரம்ப் குறிப்பிட்டிருக்கும் மரணதண்டனைத் திட்டங்களை உறுதிப்படுத்தவோ இல்லை.

