பாமக கொடி, சின்னம் உருவான கதை.. ராமதாஸின் துணிச்சலான முடிவு
பாட்டாளி மக்கள் கட்சி துவங்கப்பட்டு இன்றோடு 37வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மூன்றே முக்கால் தசாப்த பயணத்தில் பாமக பெற்றவையும் இழந்தவையும் ஏராளம் என்றாலும், கட்சி துவங்கியபோதே, யாரும் துணிய முடியாத ஒரு முக்கிய விடயத்தை செய்துமுடித்தார் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். தமிழ்நாட்டில் பரவலாக பாமக கொடி பறப்பதை பார்க்க முடியும். குறிப்பாக, வடதமிழகத்தில் கிராமம்தோறும் அக்கட்சியின் கொடியை பார்க்கலாம். இந்த நேரத்தில், கட்சியின் கொடிக்கு பின்னிருக்கும் அரசியல் காரணத்தையும், மாம்பழ சின்னம் வந்து சேர்ந்த பின்னணியையும் விரிவாக பார்க்கலாம்.
பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூக மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்டதுதான் வன்னியர் சங்கம்...அதன் தொடர்ச்சியாக, 1989-ம் ஆண்டு இதே நாளில், சென்னை கடற்கரை சீரணி அரங்கில் 10 லட்சம் மக்கள் புடைசூழ பாட்டாளி மக்கள் கட்சியைத் தோற்றுவித்தார் மருத்துவர் ராமதாஸ்.
அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட கொடி மஞ்சள், சிகப்பு மற்றும் நீலம் ஆகிய மூவர்ணங்களைக் கொண்டதாக இருந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்கள், மதச்சிறுபான்மையோர் ஆகியோரை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் கட்சிக் கொடியை வடிவமைத்தார் மருத்துவர் ராமதாஸ். பாமக கொடியில் துவக்க காலத்தில் நீல நிறம் கீழ் பகுதியில் இருந்த நிலையில், மேலே எடுத்து வைத்தார் ராமதாஸ்.
பட்டியலின மக்களை பிரதிநிதத்துவம் படுத்தும் நீல நிறத்தை கொடியின் கீழ் வைத்திருக்கிறீர்களே என்று கட்சியின் செயற்குழுவில் சில நிர்வாகிகள் கேள்வி எழுப்பியபோது, நியாயமான கேள்விதானே என்று அதனை முதன்மையாக மாற்றி வைத்தார் மருத்துவர். தலித் இயக்கங்கள், பட்டியலின மக்களுக்காக முதன்மையாக உழைக்கும் கட்சிகள் நீல நிறத்தை தங்களின் கொடியில் வைத்திருப்பது இயல்புதான். ஆனால், பெருவாரியாக வன்னியர் சமூக மக்களை கொண்டிருக்கும் கட்சியில், கொடியில் நீல நிறத்தை வைத்து புரட்சியையே செய்தார் மருத்துவர் ராமதாஸ். உழைக்கும் வர்க்கத்தை குறிக்கும் வகையில் சிகப்பு மற்றும் வன்னியர் சங்கத்தை குறிக்கும் வகையில் மஞ்சள் என்று மூவர்ணங்களை கொண்டு பறக்கிறது பாமக கொடி.
அதோடு, பாமகவின் சின்னம் என்று பார்த்தால், கட்சி துவங்கப்பட்ட காலத்தில் இருந்து, 90களின் இறுதிவரை யானை சின்னத்திலேயே போட்டியிட்டது. ஆனால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சியாக இருந்ததால், அக்கட்சியும் யானை சின்னத்தை கேட்டுக்கொண்டதால், பாமகவிடம் இருந்து யானை சின்னம் பறிக்கப்பட்டது. அப்போது, யானைக்கு மாற்றாக ராமதாஸ் தேர்வு செய்ததுதான் மாம்பழ சின்னம். கிட்டத்தட்ட கடந்த 27 ஆண்டுகால வரலாற்றில், சில பாமகவை மாம்பழ கட்சி என்று கூட அழைப்பதுண்டு. எந்த அளவுக்கு திமுக, அதிமுக சின்னம் பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்ந்ததோ, அதே அளவுக்கு பாமகவின் மாம்பழ சின்னமும் சென்று சேர்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழமாக மாம்பழம் இருப்பதாலும், அதனை எளிதில் சுவற்றில் சின்னமாக வரைந்துவிட முடியும் என்பதாலும், இந்த சின்னத்தை தேர்வு செய்ததாக கூறுகிறார் மருத்துவர் ராமதாஸ்.